இராணுவத்திற்கு பொதுமன்னிப்பு! பிரச்சினையை எங்களிடம் விட்டுவிடுங்கள் - மைத்திரி

இலங்கையில் காணப்படும் பிரச்சினைகளை, தம்மிடமே விட்டுவிடுமாறு, உலகத் தலைவர்களிடம் கோரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறையாண்மைமிக்க தேசம் என்ற அடிப்படையில், வெளிநாட்டுத் தலையீடுகளையும் அச்சுறுத்தல்களையும் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபையின் பொது விவாதம், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் (25) மாலை ஆரம்பித்திருந்த நிலையில், இலங்கை நேரப்படி நேற்று (26) அதிகாலை, சிறீலங்கா ஜனாதிபதி சிறிசேனவில் உரை இடம்பெற்றிருந்தது.

அவருடைய உரையின் ஆரம்பத்தில், தனது ஜனாதிபதிப் பதவிக் காலத்தில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகத் திருப்தியடைவதாகத் தெரிவித்த அவர், ஜனநாயகம், மனித உரிமைகள், மக்களின் சுதந்திரம், ஊடகங்களின் சுதந்திரம், நீதித்துறையின் சுயாதீனத் தன்மை ஆகியவை தொடர்பாக, நாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை, "பயங்கரவாதம்" என, நான்கு தடவைகள் விளித்த ஜனாதிபதி, அப்போராட்டத்தைத் தோற்கடித்தமைக்காக, இராணுவத்தினருக்கான தனது நன்றியறிதலையும் வெளிப்படுத்தினார். அதன்போது, "நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கையின் ஒருமித்த நாட்டுத் தன்மையைப் பாதுகாப்பதற்கும்", படையினர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், சர்வதேச சமூகத்துக்கான வேண்டுகோள்களை முன்வைத்த ஜனாதிபதி, "ஆயுத முரண்பாடு நிறைவடைந்து 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கையை, புதிய கண்ணோட்டத்திலும் புதிய எண்ணங்களுடனும் பார்க்குமாறு, சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்த அவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் உதவும் வகையில், அவ்வாறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்குமாறு வேண்டினார்.

அதன் பின்னர், சமாதானமும் தேசிய நல்லிணக்கமும் வளர்ந்துவருகின்றன எனத் தெரிவித்த அவர், மனித உரிமைகள், பலமாகப் பாதுகாக்கப்படுகின்றன எனவும், ஆயுத முரண்பாடு மீண்டும் ஏற்படாதவாறு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனக் குறிப்பிட்டார். "எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, எம்மை அனுமதிக்குமாறு, மதிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாடொன்றின் சுயாதீனம், மிகவும் முக்கியமானது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த உரையில், படையினருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைப்பாரென்ற எதிர்பார்ப்புகள் காணப்பட்ட போதிலும், அவ்வாறான கோரிக்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கவில்லை.

ஜனாதிபதியின் உரையில், இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், இராணுவத்தினருக்குக் கிடைத்த வெற்றி தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்த போதிலும், இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தற்போதைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட, மனித உரிமைகள் தொடர்பான தீர்மானம் தொடர்பாக, எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவோர் உறுதிப்பாட்டையும், ஜனாதிபதி வெளியிட்டிருக்கவில்லை.

அதேபோல், இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றச்சாட்டுகள், மனிதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற விடயத்தையும், ஜனாதிபதி வெளியிட்டிருக்கவில்லை.

தமிழ் மக்கள், தொடர்ச்சியாகக் கோரிவரும், அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினையை, அரசாங்கமும் ஜனாதிபதியும் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்ற விடயம் தொடர்பாகவும், கருத்துத் தெரிவிக்க மறுத்திருந்த ஜனாதிபதி, "அனைத்து சமூகங்களுக்கிடையிலும், நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தை ஏற்படுத்துவது" பற்றியே, மேலோட்டமாகத் தெரிவித்தார்

No comments