யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தமிழ் சிற்றூர்திக் கண்காட்சியும் வெளிவிவகார அமைச்சின் சந்திப்பும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி நோர்வே தலைநகரில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் இன்றைய  தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் அரசியல் ரீதியாக  அதி
முக்கியத்துவம் வாய்ந்த  Brandenburger Tor வரலாற்று சதுக்கத்தில்  தனது கண்காட்சியை பார்வைக்கு வைத்து தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டது.

அத்தோடு இன்றைய தினம் மதியம் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் வெளிவிவகார அமைச்சில் சிறிலங்காவுக்கான இடைக்கால உயர் அதிகாரியுடன் முக்கிய சந்திப்பும் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனு கையளிக்கப்பட்டது. சிங்கள பேரினவாத அரசின் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெறும் சிங்கள குடியேற்றம் தொடர்பாகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு அதற்கான விளக்க அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது.

இச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக சர்வதேசத்தை ஏமாற்றி வருவதையும், தாயகத்தில்  நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பையும் முதன்மைப்படுத்தி சுட்டிக்காட்டியதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட காலம் நிறைவடையும் தருணம் சர்வதேச நாடுகளால் இறுக்கமான முடிவு முன்வைக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் நேற்றைய தினம் வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதும் , அத்தோடு சர்வதேச கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என்பதும்  உள்ளடக்கப்பட்டதை தெரிவிக்கப்பட்டது.

நாளைய தினம் தமிழ் வான் கண்காட்சி  Düsseldorf நகரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



















No comments