வெடுக்குநாறி மலை:மீறினால் சட்ட நடவடிக்கை


வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருந்தே வழிபட முடியும் எனவும் , அதனை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுங்கேணி பொலிசார் ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அதேவேளை எத்தடை வந்தாலும் ஆலய பொங்கலை சிறப்பாக நடாத்துவோம் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஆதி சிவன் ஆலயத்தின் வருடாந்திர பொங்கல் நாளை வெள்ளிகிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று நாட்கள் சிறப்பாக நடாத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் ஒழுங்குகளை மேற்கொண்டுஉள்ளனர். 

அதனடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆலயத்தில் ஒலிபெருக்கி பொருத்துவதற்கான அனுமதியினை பெறுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். 

அதன் போது ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் , ஆலயத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருந்தே வழிபாடுகளை மேற்கொள்ள முடியும். அதனை மீறி எவரேனும் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக தொல்லியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் ஆலய நிர்வாகத்தினரை எச்சரித்துள்ளனர். 

குறித்த ஆலயம் அமைந்துள்ள மலை மற்றும் அதனை சூழவுள்ள காட்டு பகுதி என்பன தொல்லியல் திணைகளத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எனவும் அங்கு அனுமதியின்றி சென்றால் சட்ட நடாவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மாதம் 10 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினரை அழைத்து நெடுங்கேணி பொலிசார் எச்சரித்திருந்தனர். 

அந்நிலையில் குறித்த எச்சரிக்கை தொடர்பில் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் பின்னர் 12ஆம் திகதி மீள ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணி பொலிசார் ஆலயத்தில் ஏதேனும் மாற்றங்கள் , கட்டடங்கள் அமைத்தல் போன்ற ஏதேனும் செயற்பாடுகளை செய்வதாயின் அதற்கு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆலயத்திற்கு சென்று வருவதற்கோ , பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவோ எந்த தடையும் இல்லை என தெரிவித்திருந்தனர். 

அதனை அடுத்து , தற்போது பொதுமக்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலையே ஆலய வருடாந்திர பொங்கலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில் மீண்டும் பொலிசார் ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments