கழுத்தைப்பிடித்து தள்ளினாலும் போகமாட்டேன்:சித்தார்த்தன்!

கடந்த கால அரசியலை கற்றுக்கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று புளொட் சித்தார்த்தன்  கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தொடர்பில் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுமந்திரன் கூறி வருகின்றமை தவறு என்று சுமந்திரனுக்கு நேரடியாகவும் தெரிவிக்கப்படுமென்றும் குறிப்பிட்டிருக்கும் சித்தார்த்தன்; கடந்த கால அரசியலை கற்றுக் கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் கடந்த மாகாண சபை, நாடாளுமன்ற தேர்தல் காலங்களின் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி அமைப்பின் கீழ்தான் நியாயமான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெளிவாகக் கூறியுள்ளோம். அதற்கமைய கூட்டமைப்பு தொடர்ந்தும் சமஸ்டியையே வலியுறுத்தி நிற்கும் என்பதைத் தான் இன்றும் கூறுகின்றோம். சமஸ்டி அல்லாத பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு தேவையான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது.

நானும் சம்பந்தன் ஆகியோருமே நீண்ட காலம் தொட்டே அரசியலில் நிலைத்திருக்கின்றோம். அரசியல் ரீதியாக சமஸ்டி அமைப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை மிகத் தெளிவாக நான் அறிந்தும் உணர்ந்தும் வைத்துள்ளேன். இந்த விடயத்தில் எவருமே எனக்கு அறிவூட்டத் தேவையில்லை. போதிய அறிவு இருக்கின்றது.

குறிப்பாக புளொட் ஆயுத இயக்கம் என்றும் எங்களுக்கு அரசியலே தெரியாது என்றும் நினைத்து பேசுகின்றார்கள். இது எங்களுடைய தவறு இல்லை. அவ்வாறு சொல்பவர்களின் தவறாகும். சுமந்திரன் இவ்வாறு பலதை சொல்லுவார். அவை அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அதற்கான நாங்கள் கூட்டமைப்பில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவுகளை எடுப்பதில்லை. அவருடன் பகைத்துக் கொள்வதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments