ஒருபுறம் கூட்டு: மறுபுறம் வீராவேசப்பேச்சு?


ஒருபுறம் அரசிற்கு முண்டுகொடுத்துக் கொண்டு மறுபுறம் அடிப்பதாக மக்களிற்கு நாடகங்களை அரங்கேற்றுவது கூட்டமைப்பின் தற்போதைய உத்தியாகும்.அதே போன்று மக்களது தன்னெழுச்சி போராட்டத்தில் வலிந்து கலந்து கொண்டு வீரப்பேச்சுக்களை ஆற்றிவிடுவதும் அவர்களது கலாச்சாரமாகியிருக்கின்றது.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடங்களையும், அடையாளங்களையும் பௌத்த பிக்குகளை ஏவிவிட்டு திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கும் செயலில் தொல்பொருள் திணைக்களம் இறங்கியுள்ளது. இதைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வடக்கு மக்களின் ஆதரவை இழக்க நேரிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்து வெளியிடுகையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் முயற்சியில் பிக்குகள் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தினர். நிலைமை மோசடிமடைந்திருந்தால் அங்கு வன்முறைகூட வெடித்திருக்கலாம். தமிழர் பகுதிகளில் இதுபோன்ற செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்கள், தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். அவை தமக்குரிய இடங்கள், 400 மீற்றருக்கு அப்பால் நின்றே வழிபடவேண்டும் என்று கூறிவருகின்றனர்.

தொல்பொருள் திணைக்களம்  அரசின் நல்லிணக்க முயற்சியை குழப்பும் வகையிலேயே செயற்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் என்னதான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாலும், தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் , அடையாளம் ஆக்கிரமிக்கப்படுமானால் நல்லிணக்கம் பயனளிக்காது. மக்கள் மத்தியில் பெரும் வேதனையையே ஏற்படுத்துமெனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

No comments