காணாமல் போனோர் அலுவலகத்தை அரசாங்கம் கேலிக்கூத்தாக்குகிறது


காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் உபகுழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டமையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான யஸ்மின் சூக்கா விமர்சித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் குறைத்து மதிப்பிடும் விதத்தில் மஹிந்த சமரசிங்கவின் நியமனம் அமைந்திருப்பதாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை, பலவந்த காணாமல்போதல்கள் இடம்பெறவில்லை என மறுதலித்த அரசியல் வாதிகளை உபகுழுவில் உள்ளடக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கால எல்லை எதுவும் சுட்டிக்காட்டப்படாத நிலையில், உபகுழுவை அமைத்திருப்பது காலத்தை இழுத்தடிக்கும் உள்நோக்கமாக இருக்கலாம் என்றும் யஸ்மின் சூக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக் கூறும் விடயத்தில் சர்வதேச சமூகத்துக்கு காணப்படும் ஒரேயொரு நம்பிக்கையாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இதுபோன்ற நியமனங்கள் கேலிக்கூத்தாக அமைகின்றன. காணாமல் போனோரின் எண்ணிக்கையில் ஈராக்குக்கு அதிகமானவர்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனது முயற்சிகளை துறந்துவிடாமல் நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் சூழலையே ஏற்படுத்த வேண்டும்.

No comments