முல்லைத்தீவில் கடும் வறட்சி 8 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு


முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 8,103 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதுடன் முதல் கட்டமாக 6,824 குடும்பங்களுக்கும் இரண்டாம் கட்டமாக 7,296 குடும்பங்களுக்கும் வரட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வரட்சி தொடருமாக இருந்தால் மேலும் குடிநீர் விநியோக செயற்றிட்டம் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களது நிலைமைகள் தொடர்பில் நேற்று (17) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 8,103 குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் எமது மாவட்டத்தில் இடம்பெற்று வருகிறது.

குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 390 குடும்பங்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 3,129 குடும்பங்களுக்கும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 222குடும்பங்களுக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1,895 குடும்பங்களுக்கும் வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1,996 குடும்பங்களுக்கும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 471 குடும்பங்களுக்குமாக மொத்தமாக 8,103குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகத்தைனை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியிநூடாக விநியோகித்து வருகிறோம்.

No comments