இந்திய ஆக்கிரமிப்பு:நல்லாட்சி கள்ள மௌனம்?


இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் கள்ள மௌனம் சாதிக்கின்றது. மாறாக இந்திய மீனவர்களின் படகுகளைக் கையளிப்பதில் மாத்திரம் அதீத அக்கறை காட்டுவதாக வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையத்தின் தலைவரும், மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தின் உபதலைவருமான எம்.ஏ.ஆலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இலங்கை வடபுல கடற்பரப்பிற்குள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்றன. இவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறையினால் வடபுல கடற்பரப்பில் மீன்வளம் மிக வேகமாக அழிவுறும் அபாயமும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

மேலும் இந்திய மீனவர்கள் வடபுல கடற்பரப்பில் தொடர்ந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் நிலையில் குறித்த கடற்பரப்பில் வெறும் உவர்நீரே மிகுதியாக காணப்படும் நிலை ஏற்படும் எனவும் எம்.ஏ.ஆலம் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை அரசு இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் வெளிநாட்டுப் படகுகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை இல்ங்கை நாடாளுமன்றத்தில் இயற்றியுள்ளது.

எனினும் குறித்த சட்டத்தைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் எவரும் கைது செய்ய்ப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்பட்வில்லை. அதற்பான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவுமில்லை.

ஆனால், இந்திய மீனவர்களின் சட்டவிரோத வருகை வடபுல கடற்பரப்பில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது என எம்.ஏ.ஆலம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை கடற்றொழில் அமைச்சருக்கு இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

புதிய சட்டத்தை உடன் அமுல்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை குறித்த சட்டத்தின் கீழ் உடன் கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் உச்ச தண்டனை வழங்குதல், புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட்டவாறு அத்துமீறும் இந்திய மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் மீது ரூபா ஐந்து மில்லியன் தொடக்கம் ரூபா ஐம்பது மில்லியன் வரையான தண்டப்பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகிய கோரிக்கைகள் இலங்கை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

எனினும் குறித்த கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்திற்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது. இலங்கைத் தேசம் வடபுல மீனவர்கள் மீது எவ்வித பரிவையும் காட்டுவதில்லை மாறாக இந்தியத் தேசத்தின் நலனிலேயே அதீத அக்கறை காட்டுகின்றது.

இதற்கு இந்திய மீனவர்களின் விவகாரமே சிறந்த சான்றாகும். ஏற்கனவே வடபுல தமிழ் பேசும் மீனவர்கள் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் சகலதையும் இழந்து பரிதவிக்கும் நிலையில் இந்திய மீனவர்களின் வருகை வடபுல தமிழ் மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இலங்கை கடற்படை வசமுள்ள இந்திய மீனவர்களது படகுகளை இரகசியமாக இந்திய மீனவர்களுக்கு மீள வழங்கி வருகின்றது.
இவ்வாறு கையளிக்கப்படும் படகுகள் இன்னும் ஒருசில வாரங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் மீண்டும் அத்துமீறும் என்பது உறுதி.

இலங்கை அரசாங்கம், அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் வெறும் கண் துடைப்பாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments