பாலைதீவிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும்


பூநகரிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைதீவு கடற்பகுதி தொடர்ந்தும் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுவதை அனுமதிக்க முடியாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற உலக சுற்றுலாத் தின நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பாலைதீவு கடற்பகுதி தற்போது முற்று முழுதாக இலங்கை பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்க முடியாது. இப்பகுதிகளை விடுவித்து சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் ஆர்வமுடைய வடமாகாண முதலீட்டாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கையளிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டச்சுக் கோட்டைப் பகுதி அழகுபடுத்தப்பட வேண்டும். இதற்கு நெதர்லாந்து அரசு எமக்கு போதிய உதவிகளைச் செய்யக் காத்துக் கிடக்கின்றது.

பாரிய சுற்றுலா உணவகங்கள் எம் சுற்றாடலின் எளிமையையும் அமைதியையும் பாதிப்பன என்பது எமது கருத்து. எனவே, எம்மிடமுள்ள சமையல் திறமைகளையும் மருத்துவ பாரம்பரியங்களையும் எடுத்துக்காட்டகூடியவாறு பாரம்பரிய உணவு விற்பனை மையங்களை ஏற்படுத்தலாம்.

சுற்றுலாத் துறையினால் பல நன்மைகள் ஏற்படும் அதேவேளை, சூழல் பாதிப்பு, உள்ளூர் மக்கள் ஒதுக்கப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இவை தொடர்பாக உள்ளூர் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

No comments