யாழ். றமணனுக்கு இறுதிவணக்கம்!

தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும்  இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. 

ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர்,  இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர்.  பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார். 



தாயகத்தில் தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம் திரைப்படத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் எண்ணதத்தில் உருவான பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற உருக்கமான பாடலுக்கும், திசைகள் வெளிக்கும் என்கின்ற பெண்களின் பிரச்சினைகள் குறித்துப்பேசும் படத்துக்கான இசையினையும்  ரமணன் அவர்களே வழங்கியிருந்தார்.  அத்துடன் போராட்டகாலப்பகுதியில் தாயகத்தில் மகளிர்  அணியினரின் இசை உருவாக்கங்களிலும் இவருக்கு பெரும்பங்குண்டு.  

ஈழத்தின் மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் யாத்த மாவீரர் யாரோ என்றால் என்கின்ற பாடல், ஆதிலட்சுமி சிவகுமாரின் புதுயுகம் ஒன்று படைத்திடவேண்டும் புறப்பட்டு வா தோழி என்கின்ற பாடல், கவிஞர் வேலணையூர் சுரேசின் முல்லைமண் எங்களின் வசமாச்சு என்கின்ற பாடல் உட்பட ஏராளமான பாடல்கள் இவரின் இசையில் மலர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.  
தன்னுடைய சிறப்புமிக்க இசைத்திறனால் தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தவர். இறுதிவரை விடுதலைதாகத்தை தன் நெஞ்சிற்குள் சுமந்திருந்தவர். இத்தகைய சிறப்புகளும், நுண்திறனும், பற்றும் கொண்டுவாழ்ந்த றமணன் அவர்களின் இழப்பு என்றும் ஈடுசெய்ய முடியாததாகும். இவரின் இழப்பினால் துயரடைந்து கலங்கும் இவரின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள்,  அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் இவருக்கு எமது இறுதி வணக்கத்தை கொள்கின்றோம். 

No comments