வடமராட்சி கிழக்கு மீனவர்களை அரசியல்வாதிகள் விற்றுவிட்டனர்!தென்னிலங்கை மீனவர்களை வடமராட்சி கிழக்கில் சட்டரீதியாக கடலட்டை பிடிக்க அனுமதித்ததன் மூலம் அரசியல்வாதிகள் உள்ளுர் மீனவர்களை விற்றுவிட்டதாக வடமாகாண மீனவ சங்கங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அதன் தலைவர் வே.தவச்செல்வம் வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் நாள் தோறும் முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமேயிருக்கின்றது.

இப்பிரச்சினை பற்றி பேசவேண்டிய மீனவ அமைப்புக்களினை புறந்தள்ளி தற்போது அரசியல்வாதிகள் கொழும்பு முதல் பேச்சுக்களினை நடத்திவருகின்றனர். உண்மையில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் பேசவேண்டிய எம்மை மௌனிக்கவைத்துவிட்டு அரசியல்வாதிகள் எமது மீனவர்களை விற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே அத்துமீறி கடலட்டை பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களை உள்ளுர் மீனவர்கள் சிறைப்பிடித்தால் அவ்விடயத்தில் இலங்கை படைகள் தலையிடாதென யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்ததாகவும் வே.தவச்செல்வம் தெரிவித்தார்.இன்று பலாலியில் நடைபெற்ற சந்திப்பில் இராணுவத்தளபதி இதனை தெரிவித்ததுடன் இவ்விடயங்களை சட்டம் ஒழுங்குடன் தொடர்புபட்ட தரப்புக்களே கையாள்வதே பொருத்தமானதென கருத்து தெரிவித்ததாகவும் கூறினார்.

No comments