தமிழீழத் தேசியக் கொடிக்கு மதிப்பளித்தலும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் செய்தியும்!


17.07.2018.

ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச்சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகிறது.

உலகம் வியக்கக் கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப் போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தேசியக்கொடி பயன்பாட்டு விதிக்கோவை 1996 ஆம் ஆண்டு மாவீரர் ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டிருந்தது. 28 கோட்பாட்டு விபரம் கொண்ட மாவீரர் நாள் கையேட்டிலும், இன்னும் இந்த விடயம் பொது மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நோக்கில், மாவீரர் கேணல் பரிதி அவர்களின் புத்தகத்திலும், காந்தள் கரிகாலன் என்ற புத்தகத்திலிலும், ஏனைய விடுதலையை நேசிக்கின்ற இணையத் தளங்களிலும் இது வெளிவந்திருக்கின்றது என்பதையும் கவனத்தில் தந்து நிற்கின்ற அதே வேளை, தேசியக் கொடியின் புனிதத் தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்காக எம்மவர்களின் தான்தோன்றித்தனமான, எழுந்தமான வினாக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் மத்தியிலும், அவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற நெருக்கடிகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு தேசியக் கொடிக்குரிய மரியாதையை சரியாக நெறிப்படுத்துவதில் நாம் மிகுந்த கவனம் எடுத்துப் பணியாற்றி வருகின்றோம்.

தமிழீழம் என்ற எமது தாய்நாடு விடுதலை பெற வேண்டும் எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட்டு எம்முடைய மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். இந்த இலக்கை அடைய வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.

இரத்தம் சிந்தி, மரணத்தின் நிழலில் வாழ வேண்டும் என்ற தேசியத் தலைவரின் பாதையில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமது அளப்பரிய உயிர்களை ஈகம்செய்து உலகின் மூத்த இனங்களில் ஒன்றான தமிழ் இனத்தின் புகழை உலகறியச் செய்து, எமது இனத்தைத் தலைநிமிர வைத்துள்ளனர் மாவீரர். தாய் மண்ணிலே எமது மக்களும், மாவீரர்களும் விடுதலை வேள்வியில் தம்மை இணைத்து நின்றிருந்த வேளையில், அந்த விடுதலைத் தீயை எதிர் கொள்ள முடியாது, சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பில் இருந்து தப்பி உயிர்வாழ்வதற்காக புலம்பெயர் தேசங்கள் எங்கும் பரவிப்போன தமிழீழ மக்களின் நலனில் அக்கறை கொண்டு, ஈழத்தமிழர்கள் உலகில் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் தங்களுடைய மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், அரசியல், விடுதலை, சுதந்திரமான வாழ்வு என்பவற்றை மறந்து விடாது வாழவேண்டும.; அதற்கு உறுதுணையாக தமிழீழத் தேசிய தலைவரின் தூரநோக்கு சிந்தனையிலும், பணிப்பிலும் புலம்பெயர் தேசங்களில் அந்த நாட்டுச் சட்ட திட்டங்களுக்கமையப் பதிவு செய்யப்பட்டதே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாகும். சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து பதிவு செய்யப்பட்ட அமைப்பாக கடந்த 35 ஆண்டு;களுக்கு மேல் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும், துரோகங்களையும், உயிர்பறிப்புக்களையும், கட்டவிழ்த்து விட்ட அரட்டுக் கோன்மைகளையும் , காரணமின்றிய மனிதநேயச் செயற்பாட்டாளர் கைதுகளைம், சிறையடைப்பு, வதிவிட உரிமைகள் பறிப்பு, மனவுழைச்சல்களுக்கு மத்தியிலும், எமது இனத்தின் நியாயமான நிலைப்பாட்டை நிலைநிறுத்தி தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும், சர்வதேச நாடுகளிலும் எமது கட்டமைப்பு செயற்பட்டே வருகின்றது என்பதை உலகத் தமிழர் யாவரும் நன்றாக அறிவார்கள்.

அந்த வகையில் ஓர் இனத்தின் அத்தனை விடயங்களையும் கருத்திற் கொண்டு அந்த இனத்திற்குக் கேடு ஏற்படாத வகையில் உயிர் கொடுத்து உன்னதமான வழியில்தான் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது சென்று கொண்டிருக்கின்றது. தமிழினத்தின் தேசிய நிகழ்வோ, தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றுவதோ, தேசியக் கொடியை உரிய மரியாதைக்கு பாவிப்பதோ என அனைத்தையும் நெறிப்படுத்தி, கொடிக்குரிய புனிதத்தைப் பேணி, செயற்படுத்த வேண்டிய கடமைப்பாடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களிற்கே உண்டு. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பது தனிப்பட்ட சிலரின் குழுச் செயற்பாட்டுக் கட்டமைப்பு அல்ல.

தமிழர் ஒருங்கிணைப்பானது ஒவ்வொரு நாடுகளில் வாழும் தமிழீழ மக்களை ஒன்றிணைக்கும்; தாய்க்கட்டமைப்பாகும். அதன் செயற்பாடுகளில் விமர்சனங்கள் இருக்குமானால், அவற்றை நேரடியாக துணிந்த திறந்த மனதுடன் உரிய கட்டமைப்புகளுடன்; சென்று தீர்வுகாண வேண்டிய பொறுப்பு தேசிய விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும் உண்மையாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டிய விடயமாகும் அதே வேளை தமிழினத்தை அழிக்க நினைக்கும் அடிவருடிகளுக்கும், சிங்களப் புலனாய்வுக்கும் துணைபோய் அநாமதேய பெயர்களில் அறிக்கை விடுவதும், மக்களைக் குழப்புவதும், தமிழன் தன் இனத்திற்குச் செய்யும் மிகப்பெரும் துரோகச் செயலாகப் பார்க்கப்படுவதோடு, இவர்களை மக்கள் முன் இனம்காட்ட வேண்டிய நிலைக்கு நாமும் விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன். இது எமது மக்களாலும், உணர்வுள்ளம் கொண்ட தேசப்பற்றாளர்களாலும், பணியாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாததொரு விடயம் என்பதையும் முன்வைக்க விரும்புகின்றோம்.

எமது தேசவிடுதலைப் போராட்டத்தில் காலத்தைக் கடந்து செல்லும் புறச்சூழ்நிலைகள் இருந்தமையாலும், சர்வதேசத்தில் பல விடுதலைப் போராட்டங்கள் பொருளாதாரச் சுமையால் மழுங்கடிக்கப்பட்ட வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவரின் முன்னோக்குச் சிந்தனையில் உருவாகிய மனிதநேய அமைப்பே தமிழர் புனர்வாழ்வுக் கழகமாகும். இந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகங்கள் அந்த நாட்டில் உள்ள ஒருங்கிணைப்புக் குழுவுடனும் ஏனைய பொது அமைப்புகளுடனும் தமது உறவைப்பேணிச் செயற்பட்டே வருகின்றன.

2007 இல் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்புகளுக்கு அனைத்துலக ரீதியில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்ட வேளை அதனைக் காரணம் காட்டி பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது 2008 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக தனித்துவமாகவே தமது செயற்பாட்டினைச் செய்து வருகின்றது. அதேவேளை கடந்த ஆண்டுகளைப் போல 08.07.2018 அன்றும் பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவில் பிரெஞ்சு நாட்டுக் கொடி, ஐரோப்பியக் கொடி, மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கொடியை ஏற்றி தமிழர் விளையாட்டு விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக நாம் தமிழர் கட்சியினர் பயன்படுத்தி புனர்வாழ்வுக்கழகத்திடமோ, அல்லது வேறு எவரிடமோ அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்யப்போவதாகக் கோரிப் பெறப்பட்ட கூடாரத்தின் முன்பாக, தமிழீழக் கொடிப்பாடல் இசைக்க விட்டு தமிழீழ தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். இதனால் விளையாட்டு விழாவுக்குச் சென்றிருந்த மக்கள் குழப்பமடைந்ததுடன் கடந்த 10 ஆண்டு;களாக பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் முக்கியமானதாக கருதப்படும், தமது விளையாட்டு விழாவில் தமிழீழ தேசியக் கொடியேற்ற மாட்டோம் என்ற நிலைப்பாட்டை மாற்றி தங்கள் சார்பில் கொடியேற்றாது நாம்தமிழர் கட்சியினரை எவ்வாறு தமிழீழத் தேசியக் கொடியை ஏற்ற அனுமதித்தார்கள் என்ற பல்வேறு தரப்பினரின் கேள்விக்கும், ஊடகங்களின் கேள்விக்கும் இன்று வரை பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பதிலளிக்காமல் இருப்பது அவர்களின் நிலைப்பாட்டை ஒரு கேள்விக் குறியாக்குகிறது.

தமிழகத்தில் அன்று முதல் இன்று வரை கட்சி பேதமின்றி பல கட்சிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தமது பங்கினை அரசியல் ரீதியாகவும், மனித நேயத்துடனும் செய்து கொண்டே வருகின்ற நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வாறான உரிமையை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு வழங்கியது? அல்லது இது சம்பந்தப்பட்டவர்களின் அத்துமீறிய செயற்பாடா? என்பதை நடந்து முடிந்து பல நாட்களாகியும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு அது பற்றி மக்களுக்கோ, ஊடகங்களுக்கோ தெரிவிக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. இது இக்கட்டானதொரு நிலையை சக தாயக கட்டமைப்புகளுக்கு ஏற்படுத்தியிருப்பதுடன் தொடர்ந்து பல குழப்பங்கள் ஏற்பட வழிகோலியும் உள்ளது.

“எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில் ஏறிய கொடி, பெரும் சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில் சாற்றிய கொடி, ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள் ஆக்கிய கொடி, எம் இரத்தத்தால் சிவந்த தமிழீழத் தேசியக்கொடி தமிழீழ மக்களின் நெஞ்சு நிமிர்வோடும், இலட்சிய உறுதி கொண்ட மனதோடும், வல்லமை தாரும் மாவீரரே என்கின்ற இதய வேண்டுதலோடும் உரிய இடத்தில், கொடியேற்றத் தகுதி கொண்டவர்களால் ஏற்றி வைக்கப்படுதல் வேண்டும்;. அந்த புனிதத் தன்மையைக் கெடுக்கும் நோக்கில் தமது தனிப்பட்ட விருப்புகளுக்காகவோ, சொந்த கட்சி அரசியல் புகழுக்காவோ, தமிழீழத் தேசியக் கொடியை, உரியவர்களின் அனுமதியின்றி ஏற்றுவதும், ஏற்றுவதற்குத் துணைபோவதும் தேசியக் கொடியை மட்டுமல்ல, அந்த கொடியை தம் உயிரைவிட மேலாகப் போற்றி நிற்கும் இனத்தையே அவமதிக்கும் ஒர் செயலாகவே மக்களால் கருதப்படுகின்றது. தமிழர் வரலாற்றில் ஓர் அவமானச் செயற்பாடாகவே இது பதிவாகின்றது. எனவே இனியும் எவரும் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்ய வேண்டாம் என்பதோடு, அதற்கு எவரையும் துணைபோக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். மண் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துப் போராடி எல்லாம் இழந்து மாண்புடன் மண்ணில் வீழ்ந்து விதையாகிப்போன மாவீரர்களுடன் வாழ்ந்து அவர்களின் இலட்சியக் கனவை நெஞ்சில் தாங்கி நம்பிக்கையோடு இன்னும் பலர் தாய்மண்ணிலும், புலம்பெயர் தேசங்களிலும் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியான சூழ்நிலையில் எதிரியின் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். எமது மனஉறுதிக்கு எதிரி சவால் விடுகின்றான்;. இந்தச் சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியைத் தவிர வேறு ஆயுதங்கள் தேவையில்லை என்று, எமது தேசியத் தலைவர் அவர்கள் 1991 ஆம் ஆண்டு மாவீரர்நாள் கொள்கைப் பிரகடன உரையில் கூறியதையே இன்று நாம் மேற்கோள் காட்டி நிற்கின்றோம்.

“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
No comments