விஜயகலாவின் உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளின் வாக்குமூலங்கள் பதிவு


அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வெளியிட்ட கருத்து தொடர்பில் இன்று காலை முதல் யாழில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினாரால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த 02 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணி நிகழ்வில் கலந்துகொண்ட விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் பின்னர், விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டுமென உரையாற்றியிருந்தார்.

உரையின் பின்னர் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக, அந்நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.,சரவணபவன் உட்பட யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கான விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அன்றைய தினம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வட மாகாண முதலமைச்சரை அவருடைய வாசஸ்தலத்திற்கே சென்று சுமார் ஒன்றரை மணித்தியாளங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை அரச அதிகாரிகளிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments