இனவாத சிங்களத் தலைவர்களை அவர்களின் சமூகமே மறந்ததுதான் வரலாறு - பனங்காட்டான்

1982 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் குமார் பொன்னம்பலம் ஆகக்கூடிய வாக்குகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேகடுவ இரண்டாவது இடத்தையும் பெற, குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்குகளில் ஐம்பது வீதம்வரையான குறைந்த வாக்குகளை மட்டுமே ஜெ.ஆர். ஜெயவர்த்தன பெற்றபோது அவர் மனதில் உருவான யாழ்ப்பாணத்தாரை பழிதீர்க்கும் எண்ணமே 1983 ஜுலை தமிழின அழிப்பின் விதை.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்மீது இனவெறித் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு 1983 ஜுலையில் நடத்திய தாக்குதலின் 35வது ஆண்டு நினைவை உணர்வுபூர்வமாக அனுட்டித்த வாரம் இது.

1956ம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறையிலுள்ள கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் தமிழினத்தின்மீது ஆரம்பித்த வன்முறையும், படுகொலையும், அதன் தொடர்ச்சியாக 1958ல் நடத்தப்பட்ட வன்செயலும் ஆரம்பகால தமிழின அழிப்புகள்.

தமிழ் மக்களின் மனதில் மாறாத ரணமாக இடம்பெற்ற தாக்குதல்களில் அப்போது இவையே முதன்மையாகப் பார்க்கப்பட்டன. மேற்சொன்ன ஒவ்வொரு தாக்குதல்களிலும் சுமார் 300 முதல் 500 பேர் வரையானோர் கொல்லப்பட்டனர்.

இதுதவிர, கொள்ளையும் சொத்தழிப்பும் 1977ல் இடம்பெற்றது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான முதலாவது அரசாங்கத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு இது.

இலங்கையின் மலைநாட்டுப் பகுதியிலும், கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளுமே இதன் இலக்குகளாக அமைந்தன. இதிலும்கூட 500 வரையான தமிழர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இத்தொடரின் அடுத்த கட்டமே 1983 ஜுலை. திருநெல்வேலியில் ஜுலை 23ம் திகதி இரவு 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தெற்கில் தமிழர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசியல் பகுப்பாளர்களும் ஊடக அறிக்கையாளர்களும் கூறி வருகின்றனர்.

ஜுலை 24ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் கொழும்பை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட தமிழருக்கெதிரான தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவராக இப்பத்தி எழுத்தாளரும் இருக்கும் காரணத்தால், 13 இராணுவத்தினரின் கொலையுடன் இதனைச் சம்பந்தப்படுத்துவதை இவரால் ஏற்க முடியாதுள்ளது.

இதற்கு ஆதாரமாக ஆகக்குறைந்தது இரண்டு விடயங்களை இங்கு குறிப்பிட முடியும்.

கொழும்பின் அத்துறுகிரிய என்ற இடத்தில் 1962ல் அரசாங்க எஃகு கூட்டுத்தாபனம் ர~;ய அரசாங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான கனரக எஃகு பொருட்கள் இங்கு தயாரிக்கப்படும்.

1983 காலப்பகுதியில் இக்கூட்டுத்தாபனம் இனவாதியான சிறில் மத்தியுவின் அமைச்சின் கீழ் இயங்கியது. 1982ன் பிற்பகுதியிலிருந்து வாள், கத்தி, அலவாங்கு போன்ற பல ஆயுதங்கள் இங்கு உருவாக்கப்பட்டன. இவை எதற்காக என்ற கேள்வி இங்கு கடமையாற்றிய சில பொறியியலாளர்களிடம் எழுந்தது.

ர~;யாவின் மொஸ்கோவில் பட்டம் பெற்றவர்களே கூடுதலாக இங்கு பணியாற்றினர். இவர்களுள் ஒரு தமிழரும் ஒரு சிங்களவருமான இரு பொறியியலாளர்கள் இப்பத்தி எழுத்தாளருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இவர்கள் மூலமாகவே கத்தி, வாள் தயாரிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்தன.

இரண்டாவது ஆதாரம் - திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொரளை – நாரகன்பிட்டி வீதியிலுள்ள கனத்தை மயானத்தில் 24ம் திகதி இரவு வேளையில் தகனம் செய்யப்பட்டன.

அடுத்த சில மணித்தியாலங்களில் பொரளையை அண்டிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அன்றிரவும் மறுநாளான ஜுலை 25ம் திகதியும் கொள்ளையடிப்பும் சொத்தழிப்புமே பிரதானமாக இருந்தது. சிங்கள வெறியர்களுடன் தர்க்கப்பட்ட தமிழர்கள் மறுபேச்சின்றி சரிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்த நாட்களில் தென்னிலங்கை முழுவதும் தமிழர் வாழ்ந்த இடங்கள் அடையாளம் காட்டப்பட்டு தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

அடையாளம் காண்பதற்கு அவர்களுக்கு உதவியாகவிருந்தது தேர்தல் வாக்காளர் இடாப்பு. ஜுலை 23ம் திகதிக்குப்பின்னர் இந்த இடாப்பு பெறப்படவில்லை.

அதற்குச் சில வாரங்களுக்கு முன்னராக அமைச்சர் சிறில் மத்தியுவின் உத்தரவுக்கிணங்க தேர்தல் திணைக்களத்திடமிருந்து இந்த இடாப்பு வெளியே வந்தது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் உருவாக்கப்பட்ட தாக்குதல் குழுவின் தலைவரிடம் இந்தப் பட்டியல் இருந்ததை இடதுசாரிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் இவர்கள் அன்றைய அரசியல் சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக இருந்ததாக அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் கூறுவர்.

ஆக, மேற்சொன்ன இரு ஆதாரங்க;டாகத் தெரிய வருவது என்னவெனில், 1983 ஜுலை இனவழிப்பு திருநெல்வேலித் தாக்குதலின் பின்னர் திடீரென உருவான ஒன்றல்ல என்பதும், பல மாதங்களாக அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதுவேயாகும்.

தமிழர் மீதான இந்த இனவெறி செயற்பாட்டுக்கு தர்மி~;டர் என அழைக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பரிபூரண ஆதரவும், அவரது அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும் நிறைவான பங்களிப்பும் இருந்தது என்பதற்குக் கூட ஆதாரங்கள் உண்டு.

ஜுலை 24ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தமிழின அழிப்பு ஆரம்பமானபோதிலும், அடுத்த மூன்று நாட்களாக தர்மி~;டர் ஜெயவர்த்தன அமைதி காத்தார். சுமார் 4,000 வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை அறிந்தும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்காது மௌனமாக இருந்தார்.

இக்குறுகிய நாட்களில் இரண்டு லட்சம் தமிழர்கள் தெற்கில் அகதிகள் ஆக்கப்பட்டனர். இவர்களுள் ஒன்றேகால் லட்சம் வரையானவர்கள் முதல் மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும், தமிழருக்குச் சொந்தமான பொது மண்டபங்களிலும் தஞ்சம் புகுந்தனர். உணவு, குடிநீர் வசதி எதுவுமில்லாது பலர் நோயாளிகளாயினர்.

இவற்றையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் நான்காம் நாளே பாடசாலை வளாகங்களில் அகதி முகாம்களை அமைக்க ஜெயவர்த்தன அனுமதி வழங்கினார்.

29ம் திகதி வெள்ளிக்கிழமை கோட்டை மற்றும் புறக்கோட்டைப் பகுதிகளில் புலிகள் வந்துவிட்டனர் என்ற புரளி கிளப்பப்பட்டது. இதனால் எஞ்சியிருந்த தமிழர் வணிக நிறுவனங்கள் தீ மூட்டப்பட்டன. உள்ளேயிருந்தவர்களும் வெளியில் தப்பியோட முனைந்தவர்களும் உயிருடன் எரியூட்டப்பட்டனர்.

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று கூவிய ஜே.ஆர்., தமிழரைப் பட்டினி போடுவதில் எவ்வகையான இன்பம் கண்டார் என்பதைப் புரிந்து கொள்ள, லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியின் அந்த ஒரு வாக்கியம் மட்டும் போதும்.

“தமிழர்களை நான் பட்டினி போட்டால், சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவர்” என்பதே இவரது அந்த வாக்கியம்.

இப்படியாக தன்னைச் சிங்களவனாகவும், தனது மக்கள் சிங்களவர் என்பதாகவும், தமிழ் மக்களை சிங்களவரின் எதிரிகளாகவும் அர்த்தப்படுத்திச் செயற்பட்ட ஒருவர் எவ்வாறு அனைத்து மக்களதும் தலைவராக இருக்க முடியும்?

1982ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடியதான 87,627 வாக்குகளை தமிழ் காங்கிரஸ் வேட்பாளரான குமார் பொன்னம்பலம் பெற்றிருந்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவ 77,300 வாக்குகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு வந்தார்.

ஆனால், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு 44,780 வாக்குகள் கிடைத்ததால் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இலங்கையில் 22 தேர்தல் மாவட்டங்களில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 21 மாவட்டங்களில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் நின்றார். ஆனால், யாழ்ப்பாணத்தில் மட்டும் இவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இது அவரது அடிமனதில் ஷயாழ்ப்பாணத்தாருக்கு சந்தர்ப்பம் வரும்போது ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்| என்ற பழி தீர்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது என்று அவரை நன்கறிந்த அரசியலாளர்கள் சொல்வர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குமார் பொன்னம்பலத்துக்கு 47,095 வாக்குகள் கிடைத்தன. ஜே.ஆருக்கு 1,001 வாக்குகள் மட்டுமே மேலதிகமாகக் கிடைத்து அவர் முதலாம் இடத்துக்கு வந்தபோதும், அதுவும்கூட அவரது பழிவாங்கும் சிந்தனைக்கு மேலும் வலுவூட்டியது.

மொத்தத்தில் எல்லா வகையிலும் தமிழின அழிப்பை 1983 ஜுலையில் நடத்துவதற்கு ஜே.ஆர். அணிக்கு நிறையக் காரணங்கள் இருந்தன.

1981 ஜுன் முதலாந் திகதி யாழ்.பொதுநூலகத்தை அமைச்சர்கள் சிறில் மத்தியு, காமினி திசநாயக்க ஆகியோர் தலைமையில் தெற்கிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிங்களக் காடையர் எரித்த நிகழ்வு தமிழ் மக்கள் மனதில் மாறாத ரணமாக இருந்ததுவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தாம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படுவதற்கு காரணமென்பதை ஜே.ஆர். ஏனோ எண்ணத் தவறி விட்டார்.

இவ்வாறாக தமிழின அழிப்பில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் எதிர்கால வரலாற்றில் எவ்விடத்தில் வைக்கப்பட்டார்கள் என்பதை அவர்களால் அறிந்திருக்க முடியாது.

தமிழரின் தோலில் செருப்புப் போட விரும்பிய கே.எம்.பி.ராஜரட்ண, 1983 ஜுலையின் சூத்திரதாரியான சிறில் மத்தியு, தமிழர்களை உணவின்றித் தவிக்க வைப்பதில் இன்பம் கண்ட ஜெயவர்த்தன… இப்படியான எவரையும் சிங்கள் மக்கள் இன்று துதித்து வணங்கவில்லை.

இவர்களின் சொந்தத் தொகுதிகளில் இவர்களை ஆதரித்து உயர்த்திய மக்கள் ஆகக்குறைந்தது இவர்களுக்கு ஒரு சிலைகூட வைக்கவில்லை.

இவர்களை சிங்கள பௌத்த காவலர்களாக அவர்களின் சமூகமே இன்று ஏற்றிப் போற்றவில்லை. இதுதான் வரலாறு.

இந்த வரலாற்று உண்மையைப் புரிந்து கொண்டால் நல்லெண்ணமும் நல்லாட்சியும் நேர்மையாகலாம்.

தமிழ் மக்களும் தங்கள் மண்ணில் தங்கள் சுயநிர்ணய உரிமையுடன் நிம்மதியாக வாழ முடியும்.

இதற்கான காலம் எப்போது உருவாகும்?

No comments