திரையரங்கில் இலங்கைக்கொடிக்கு மரியாதை!

இலங்கையின் திரைப்பட அரங்குகளில் இலங்கை தேசிய கீதம் இசைக்க இருப்பதாக அறியக்கிடக்கிறது. பொதுவாக் திரைப்படம் பார்க்க பொழுதுபோக்குக்காக செல்பவர்களுக்கு இப்படி எழும்பி நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் ஒரு வதை தேவை தானாவென முன்னணி சமூதாய நல மருத்துவரும் இலங்கை சுகாதார அமைச்சின் அதிகாரியுமான முரளி வல்லிபுரநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வைத்தியசாலைகளில் தேசிய கீதம் இசைத்து இயலாத நோயாளிகளை எழுந்து நிற்க வைத்து சிரமப் படுத்துவது எல்லாம் தேவை தானா ? தனி மனித சுதந்திரத்துக்கு மதிப்பளித்து இந்திய அரசாங்கத்தினால் அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப் படவேண்டும் என்ற உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் விரும்பிய திரையரங்குகளில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படலாம் என்று மாற்றியதை எமது அமைச்சர்கள் அறியவில்லையாவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கீதத்தை எல்லா இடமும் இசைப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணத்தவறியுள்ள நாட்டில் தேசிய உணர்வை வளர்க்க முடியுமாவென விமர்சித்துள்ள அவர் ஆரோக்கியமான விவாதமொன்றின் ஊடாக இவ்விடயம் பரிசீலிக்கப்படவேண்டுமென கோரியுள்ளார்.

சிங்கள பௌத்தத்திற்கு மட்டும் முன்னுரிமை வழங்கி அமைந்துள்ள இலங்கையின் தேசிய கீதம் மற்றும் தேசியக்கொடி என்பவை தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமென ஒருபிரிவினர் கோரி வர மறுபுறம் தமிழ் மக்கள் பெரும்பாலும் இலங்கை தேசியக்கொடியையும் தேசிய கீதத்தையும் புறந்தள்ளியும் வருகின்றமை தெரிந்ததே.

No comments