தனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர் விக்கி


தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனிடம், தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக் கினன் , வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பின், பின்னர், அதுபற்றி விளக்கமளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

“எனது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியும், புதிய கட்சி உருவாக்கப் போகின்றீர்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் கனேடியத் தூதுவர் என்னிடம் வினவினார்.

அதற்கு நான், இதுபற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எனது கட்சி என்னை வேட்பாளராக நிற்க வாய்ப்பளிக்காவிடின், வீட்டிற்குச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின்,  புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தான் கூறியிருந்தேன்.

ஆனால், ஊடகங்கள் நான் கூறிய  முதல் இரு விடயங்களையும் விட்டுவிட்டு, மூன்றாவதாக கூறிய விடயத்தை மட்டும் பெரிதாக வெளியிட்டு விட்டன.

தனிக்கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் நான் எடுக்கவில்லை என்று அவருக்கு தெரிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

No comments