வெலிக்கடை தியாகிகளிற்கு அஞ்சலிக்கும் சயந்தன்,வரதர்?


விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தி வரும் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன்,போராட்டத்தை காட்டிக்கொடுத்த வரதராசாப்பெருமாள் ஆகியோரை சிறப்பு விழா பிரமுகர்களாக அழைத்து வெலிக்கடை படுகொலை தியாகிகளது நினைவேந்தலை கொச்சைப்படுத்தியுள்ளது டெலோ அமைப்பு.

நேற்று வெள்ளிக்கிழமை நெல்லிடியில் நடைபெற்ற 35வது வெலிக்கடை படுகொலை தியாகிகளது நினைவேந்தல் நிகழ்வில் வெறும் 52 பேர் மட்டுமே பங்கெடுத்திருந்தனர்.
முதலமைச்சரினை நிளைவேந்தலிற்கு அழைத்திருந்ததாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்த போதும் முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் அதனை மறுதலித்துள்ளன.

போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாதிருந்த நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன் முதல் சிறீகாந்தா வரை பங்கெடுத்திருந்தனர்.வெளியிலிருந்து தமிழரசு பிரமுகரென சயந்தனையும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப்பெருமாளையும் தருவித்திருந்தனர்.

நிகழ்வில் வரதராசாப்பெருமாள் தற்போதைய வடமாகாணசபை வினைத்திறனற்றதெனவும் அனந்தியிடமுள்ள துப்பாக்கி பற்றி நாள் முழுவதும் வெறுமனே கூடி ஆராயும் சயந்தன்,அஸ்மின் போன்றவர்களது கூச்சலே நிரம்பியிருப்பதாக அவர் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

அதிலும் தேச விடுதலைபற்றி பேசிய நாம் இப்போது அனந்தியிடமுள்ள துப்பாக்கி பற்றி ஆராயும் நிலைக்கு சென்றிருந்ததாக கவலை தெரிவித்தார்.
இதனிடையே தமது ஆதரவு கோட்டையென சொல்லிக்கொள்ளும் கரவெட்டியில் நடந்த கூட்டத்திற்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரென சொல்லிக்கொள்ளும் கணேஸ் வேலாயுதம் போன்றவர்களை புறந்தள்ளி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் தற்போதே ஆசனங்களை பதிவு செய்து வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மக்கள் இவை குறித்து அலட்டிக்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments