கொமன்வெல்த் செயலாளர் கொழும்பு வருகை


கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

2016 ஏப்ரல் மாதம் கொமன்வெல்த் அமைப்பின் செயலராக பதவியேற்ற பின்னர், பற்றீசியா ஸ்கொட்லன்ட் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

நாளை கொழும்பு வரும், இவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

எதிர்வரும், 2ஆம், 3ஆம் நாள்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, பைசர் முஸ்தபா, அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரை கொமன்வெல்த் செயலாளர் நாயகம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

2018 கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இணங்கிக் கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பரந்துபட்ட ஒத்துழைப்பு ஆகிய விடயங்களை மைய்யப்படுத்தியே இவர் பேச்சுக்களை நடத்துவார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments