மணிவண்ணனைச் சீண்டும் தமிழரசு - மாநகர உறுப்பினர் பதவி நீக்கக் கோரி வழக்கு


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனின் யாழ்.மாநகர சபை உறுப்புரிமையை நீக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மணிவண்ணன் யாழ்ப்பாணம் மாநகரசபையில் தமிழரசுக் கட்சிக்கும் அக் கட்சியின் உறுப்பினரான முதல்வர் ஆர்னோல்ட்டுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார். சபையில் பல தருணங்களில் தங்களையும் மீறி தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மணிவண்ணனின் உரைகளை வரவேற்று கரவொலி எழுப்புவதோடு மணிவண்ணன் சொன்னால் சரியாக இருக்கும் என்ற நிலைப்பாடும் நீடித்துவருகிறது.

அது ஒருவகையில் கூறுவதானால் யாழ் மாநகரசபையை அனுபவமில்லாத ஆர்னோல்டிற்குப் பதிலாக சட்டத்தரணியாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளராக தமிழர் பிரச்சனைகள் தொடர்பில் இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள் என அரசியல் முதிர்ச்சிமிக்க மணிவண்ணனே வழிநடத்திச் செல்லும் தன்மையும் காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே சினமடைந்த தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த ஆர்னோட்டின் சீண்டல்களை ஏற்ற அவரது குருவன சுமந்திரன் தரப்பு கொழும்பிலுள்ள சிங்களவர் ஒருரைப் பிடித்து அவரது பெயரில் குறித்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறித்த வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலகர் உள்பட்டோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மணிவண்ணன் தேர்தல்களிற்காக சமர்ப்பித்த முகவரி போலியானது எனவும் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் எனவும் கூறியே மணிவண்ணனுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

எனினும் “ஆவலுடன் எதிர்பார்த்தது போன்று எனது மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றேன். புயலாக எழுகின்ற எத்தகைய சவால்களையும் மலையாக நின்று எதிர்கொள்ள நான் தயார். என்னை வெளியேற்ற துடிக்கும் எனது நண்பர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்” -என்று யாழ். மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி மணிவண்ணன் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

No comments