பிரபாகரன் தலைவர் அல்ல - அதிபர்களுக்கு வகுப்பெடுத்த மாணிக்கராஜா


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் என விரிவுரை நடத்தியிருக்கும் யாழ் கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கராஜா தான் தன்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் காப்பாற்றிவருவதால் தன்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் என்றும் அதிபர்களுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறார்.

யாழ்ப்பாணம் கல்வி வலய அதிபர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (31) யாழ் கல்வி வலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்று அதிபர்களுக்கு விரிவுரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று காலை அதிபர்களுக்கான செயலமர்வு ஆரம்பமான போது யார் தலைவர் என்று கூறுங்கள் என்று மாணிக்கராஜா அதிபர்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அதன் போது பல அதிபர்கள் தலைவர் என்றால் பிரபாகரன் என்றும் ஏனைய அதிபர்கள் தலைவருக்கான பண்புகளையும் கூறியிருக்கின்றனர்.

அதன் பின் குறிப்பிட்ட மாணிக்கராஜா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் நான் என்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் காப்பாற்றிவருவதால் என்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் எனக் கூறியிருக்கிறார்.

அவரது பேச்சால் பல அதிபர்கள் சினமடைந்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் தொடர்ந்து வகுப்பு நடத்திய மாணிக்கராஜா தவறு செய்யாதவர்கள் என்று இல்லை. நீங்கள் தவறு செய்வதானால் தவறு ஏற்படாதவாறு தவறு செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments