அமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு


அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாத நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் இந்த உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகளும், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்றனர். இது அமெரிக்க- சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களாகும். இந்தப் பேச்சுக்களில் ஓடுபாதை நடவடிக்கைகள், விநியோகம், பாதுகாப்பு, மருத்துவம், போன்ற துறைகளில், நிபுணத்துவம் பெற்ற ஏழு அமெரிக்க விமானப்படை அதிகாரிகள், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். பிராந்திய பாதுகாப்பு, இரண்டு நாடுகளினதும் விமானப்படையினருக்கான எதிர்கால பயிற்சி வாய்ப்புகள், ஒத்திகைகள் குறித்தும் இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தரப்பு குழுவுக்கு பசுபிக் விமானப்படைத் தளபதியின், வான் தேசிய காவல்படை உதவியாளர் மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஓ எய்பேர்ட் தலைமை தாங்கினார். பசுபிக் விமானப்படையின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தெற்காசியப் பிரிவுக்கான பணிப்பாளர், மேஜர் மார்ச் லீசரும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றார். இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஓ எய்பேர்ட், “இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கிறது. சிறிலங்காவுடன் நாம் பலமான உறவுகளை வைத்துக் கொள்வதற்கு இது முக்கியமான காரணம். இந்தப் பேச்சுக்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளன.
சிறிலங்கா விமானப்படை தமது தேவைகள், முன்னுரிமைகள் தொடர்பான தகவல்களை பரிமாறி, மிகச் சிறந்த பணியை மேற்கொண்டது. இது அவர்களை இந்தோ பசுபிக் கட்டளை பீடத் தலைமையகத்துக்கு மீண்டும் அழைத்து வர எமக்கு உதவியாக உள்ளது. இது அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை முன்னேற்றுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது” என்று கூறினார். இந்தப் பேச்சுக்களில், பெறுமதியான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், பிணைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்குமான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

No comments