ஏட்டிக்குப்போட்டியாக நூலக எரிப்பு நினைவேந்தல்!


யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று பல்வேறு தரப்புக்களாலும் ஏட்டிக்குப்போட்டியாபாக நினைவு கூரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.

இந்நினைவை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை காலை நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வழமையாக நினைவேந்தல் அறிவிப்பினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுக்க அவசர அவசரமாக வாழைக்குற்றியுடன் குறுக்கறுத்து தானும் தனது சகபாடிகள் சகிதம் நிகழ்வை நடத்தி ஊடகங்களை தன்பக்கம் திருப்பிக்கொள்வது க.சிவாஜிலிங்கத்தின் உத்தியாகும். 

இன்றும் வழமை போலவே அவசர அவசரமாக நூலகத்தினுள்ளே அலுவலர்கள் நினைவேந்தலை நடத்த கே.சிவாஜிலிங்கம் வாழைக்குற்றியுடன் வீதிக்கு வந்திருந்தார். அதனை தொடர்ந்து வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ,அமைச்சர் அனந்தி சசிதரன் ,கே.சிவாஜிலிங்கம் பங்கெடுக்க நூலக முன்றலில் சுடரேற்றி நினைவு நாள் அனுஸ்டிக்கபட்டிருந்தது.

இதேவேளை முன்னதாகவே அழைப்புவிடுத்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவு கூரல் இன்று மாலை பொதுநூலக முன்றலில் இடம்பெற்றிருந்தது.நூற்றுக்கணக்கில் பொதுமக்கள்,கட்சிப்பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்வாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  
1981ம் ஆண்டில் ஜக்கிய தேசியக்கட்சியின் பின்னணியில் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.அதே ஜக்கிய தேசியக்கட்சியின் பங்காளியாக கூட்டமைப்பு தற்போது செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments