சபைத் தீர்மானத்தை மீறும் முதல்வர் ஆன்னோல்ட் - மணிவண்ணன் கடும் கண்டனம்


யாழ்.மாநகர சபைத் தீர்மானத்தை மீறி இராணுவத்துடன் இணைந்து முதல்வர் மரம்நடுகை நிகழ்வில் கலந்து கொண்டதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாநகர சபை உறுப்பினருமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

சபைத் தீர்மானத்தை மீறி முதல்வர் செயற்பட்டால் சபை நடவடிக்கைகளில் இருந்து தமது கட்சி உறுப்பினர்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 5 ஆவது அமர்வு நேற்று (22)  காலை நடைபெற்றது. இவ்வமர்வில் சபையின் தீர்மானத்தை மீறி முதல்வர் இராணுவத்துடன் இணைந்து மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இதன் போது கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் நிராகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிவில் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடக் கூடாது என்றும், இராணுவம் பங்கு கொள்ளும் நிகழ்வில் நாங்கள் கலந்து கொள்வதில்லை என்றும் எடுத்த தீர்மானத்தை முதல்வர் 100 வீதம் மீறியுள்ளார். இது முதல்வரின் மோசமான நடவடிக்கையாகும்.

இந் நடவடிக்கையினை எமது கட்சி வண்மையாகக் கண்டிக்கின்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் நாங்கள்  இந்த சபையில் தொடர்ந்திருப்பது என்பது அர்த்தமற்ற ஒன்றாகத்தான் இருக்கும் என்றார்.

No comments