மகிந்தவின் தேர்தல் செலவிற்கு காசு கொடுத்த சீனா - அமெரிக்க ஊடகம் அதிர்ச்சித் தகவல்

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு தன்வசப்படுத்தியது என்பதை விரிவாக ஆய்வு செய்து விவரித்துள்ளது இந்தக் கட்டுரை.

‘சீனாவுடன் மகிந்த ராஜபக்ச மிகநெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். 2015 ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்த போது,மகிந்த ராஜபக்ச வட்டத்தை நோக்கி பெருமளவு நிதி சீனாவினால் பாய்ச்சப்பட்டது.

குறைந்தபட்சம் 7.6 மில்லியன் டொலர் நிதி, சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின், ஸ்ரான்டட் சார்ட்டட் வங்கி கணக்கின் ஊடாக மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தேர்தலுக்கு 10 நாட்கள் முன்னதாக, 3.7 மில்லியன் டொலருக்கு காசோலை வழங்கப்பட்டது.

678,000 டொலர் பெறுமதியான ரிசேர்ட்கள் மற்றும், ஏனைய பரப்புரைப் பொருட்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.

297,000 டொலருக்கு ஆதரவாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் (பெண்களுக்கான சேலைகள் உள்ளிட்ட) வாங்கப்பட்டன.

மகிந்தவுக்கு ஆதரவு அளித்த முக்கியமான பௌத்த பிக்குவுக்கு, 38,000 டொலர் வழங்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வசிப்பிடமாக இருந்த அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான கொடுப்பனவுகள், சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் துணை கணக்குகளின் மூலமே வழங்கப்பட்டன.” என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

No comments