லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடுகடத்த பிரிட்டனிடம் மைத்திரி கோரிக்கை


லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும், லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிடம் கோரியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசை நேற்று பஜெட் வீதியில் உள்ள தமது இல்லத்துக்கு அழைத்த சிறிலங்கா ஜனாதிபதி அவருடன் நடத்திய சுமார் 30 நிமிடச் சந்திப்பின் போதே இவ்வாறு கோரியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா ஜனாதிபதியின் இணைப்புச் செயலர்  சிறிலால் லக்திலக, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் பங்கேற்றனர்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்த லங்கா இ நியூஸ் இணையத்தளம், கடந்த நவம்பர் மாதம், தொடக்கம் சிறிலங்காவில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டது.

சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான விமர்சனங்களை வெளியிட்ட லங்கா இ நியூஸ், சிறிலங்காவுக்கு வெளியே இருந்து இயக்கப்படுவதால், அதன் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments