யாழ் பல்கலை மாணவர் படுகொலை வழக்கிலிருந்து 3 பொலிசார் விடுவிப்பு ??


மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அறியக் கிடைத்துள்ளது

அத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

கொலையை விபத்தாக மாற்ற முயற்சி
சம்பவம் நடைபெற்ற மறுநாள் முற்பகல், யாழ்ப்பாணம் பொலிஸார் விபத்து என்ற அடிப்படையில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். மாணவர்களின் சடலங்கள் நள்ளிரவே பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அதனால் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்துப் பொலிஸார், விபத்துச் சம்பவம் என்ற வகையிலேயே நீதிவானுக்கு முதல் அறிக்கை முன்வைத்தனர்.


சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிவான், சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்று விசாரணையும் ஆராய்ந்து வழக்கை துப்பாக்கிச் சூட்டில் கொலை என்றே முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

5 பொலிஸார் கைது

அதனடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினாார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

துப்பாக்கி இடமாற்றம்
சுலக்சன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும், கஜன் விபத்தாலும் கொல்லப்பட்டனர் என்று சட்ட மருத்துவ அதிகாரி மன்றுக்கு அறிக்கையிட்டிருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, பொலிஸ் விசாரணையின் போது, பொலிஸ் நிலையத்தில் வேறுபடுத்தப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எனினும் யாழ்ப்பாணம் நீதிவானின் உத்தரவில் அந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டு இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.

விசாரணைகள் கிடப்பில்
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் திருப்திகரமான அறிக்கை எதையுமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் முன்வைக்கவில்லை. விசாரணைகளை அவர்கள் இழுத்தடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மன்றில் முன்வைக்க போதும், விசாரணைப் பணிகள் முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்படவில்லை.

மாணவர்கள் சுலக்சன், கஜனின் குடும்பங்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் நலன் சார் சட்டத்தரணிகளாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி வந்தனர்.

பாதிக்கப்பட்டோருக்கு அழுத்தம்
“உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அழைத்தனர். அதனால் மறுநாள் கஜன் எனும் மாணவனின் தாயார் பொலிஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த பொலிஸ் உயர் அதிகாரி, இது தற்செயலாக நடந்த சம்பவம் இது தவறுதலாக நடந்து விட்டது, வேணும் என்று செய்த ஒன்றல்ல என பல விடயங்களை கஜனின் தாயாரிடம் தெரிவித்தார்” என்று மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

நீதிமன்றின் கட்டளைக்கு சிஐடி நடவடிக்கையில்லை
பொலிஸ் அதிகாரியின் அழுத்தம் தொடர்பில் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் அதுதொடர்பான விசாரணை அறிக்கையையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதுவரை நீதிமன்றில் முன்வைக்கவில்லை.

5 பொலிஸாரும் பிணையில் விடுவிப்பு
5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு வரும் 26ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

3 பொலிஸார் விடுவிப்பு
அன்றைய தினம் வழக்கிலுள்ள 5 சந்தேகநபர்களில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 பொலிஸாரை விடுவிப்பதற்கான சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலை குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கும். 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழக்கிலிருந்து நீதிமன்றால் விடுவிக்கப்படுவார்கள்.

மேலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்வர். அதனையடுத்து சுருக்க முறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிய வருகிறது.

ஜனாதிபதியின் உறுதிமொழி காற்றில்
மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதுதொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 3 மாதங்களுக்கு உரிய விசாரணைகளை முறிவுறுத்தி நீதி வழங்கப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார். அதனையடுத்தே மாணவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.
எனினும் அடுத்து வந்த மாணவர் ஒன்றியம் இந்த விவகாரத்தை தட்டிக் கழித்துவிட்டது.

No comments