தனக்கு பதவி கிடைப்பதைத் தடுத்த சம்பந்தன் சுமந்திரனுக்கு நன்றி சொன்ன அங்கஜன்


சக தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராவைத் தடுப்பதற்கு அயராது உழைத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.

பிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதனை தெரிவு செய்ய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது. எனினும் அவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

அதனால் அங்கஜன் இராமநாதனின் பெயரை முன்மொழிவதிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பின்வாங்கியது. முதலாவது பெண் பிரதி சபாநாயகராக நியமிக்கும் வகையில் சுதர்சினி பெர்ணான்டோபிள்ளையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்மொழிந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது என அந்தக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி தமது உறுப்பினர் ஒருவரையும் முன்மொழிந்து, அவரை பிரதி சபாநாயகராகவும் வெற்றிபெறச் செய்ததது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கஜன் இராமநாதனை முனமொழியாத போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதர்சினி பெர்ணான்டோபிள்ளைக்கும் ஆதரவளிக்காமல் வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியது. இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இந்தக் கருத்தை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

No comments