திருமலைப்போராட்டம்: 458 நாளை தாண்டியது!


தமிழ் மக்களது தலைவராக தமிழரசு கட்சியினர் உருவகித்துக்கொள்ளும் இரா.சம்பந்தன் எட்டிக்கூட பார்த்திராத நிலையில் திருமலையினில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம் தொடர்கின்றது.

கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உவுகளுக்கான நீதி கோரி நடத்தப்பட்டு வருகின்ற போராட்டமானது திருகோணமலையின் உவர்மலையில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக 458 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் எவ்வித தீர்வுகளுமின்றித் தொடர்கின்றது. 

ஏறத்தாழ ஒன்றரை வருட காலமாக வீதியோரத்தில் கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நடத்தப்பட்டுவருகின்ற இப்போராட்டமானது திருகோணமலையில் மட்டுமின்றி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய நிலையில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவி கருத்து தெரிவிக்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குநீதி கோரி அவர்களது தாய்மார்கள் உட்பட பலரும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவகத்திற்கு முன்னாள் ஒன்றரை வருட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான பல ஆணைக்குழுக்களை அமைத்து அரசாங்கம் விசாரணைகளைமேற்கொண்ட போதும் இதுவரையிலும் திருப்திகரமான தீர்வு எதனையும் தரவில்லை" எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசு இப்பிரச்சனை தொடர்பில் உருவாக்கியுள்ள அமைப்புகள் சர்வதேசத்தின் பார்வைக்கான ஒரு கண்துடைப்பு. இப்பிரச்சினைக்கு தீர்வு கேட்டு நாலு தடவைகள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியும் எவ்வித பலனும் கிட்டாதநிலையிலேயே இப்போராட்டம் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்க்கான மரணச்சான்றிதழோ அல்லது அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான நஸ்ட ஈடோ தம் போராட்டத்திற்கான தீர்வு இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.


No comments