போராட்டம் புனிதமானது – கேவலப்படுத்த வேண்டாம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

எமது போராட்டம் நீதிக்கும் நியாயத்திற்குமான போராட்டம் என்பதால் அதனைக் கேவலப்படுத்த வேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது கைகளால் இராணுவத்திடம் ஒப்படைத்த எம் உறவுகளின் விடுதலைக்காக நாம் போராடி வரும் நிலையில் குறித்த சிலர் எமது போராட்டத்தினைக் கேவலப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் வேதனையளிக்கின்றது.

நாம் பணத்திற்காகவும், வேறு சில தரப்பினரின் தூண்டுதலின் பேரிலும் இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாகவும் கூறிவருகின்றனர்.

இது எமது போராட்டத்தினைக் கேவலப்படுத்துவதாகவும் எமது உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கின்றது. இந்தத் தொழிலாளர் தினத்தினைத் தமது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தும் சிலரின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக எமது போராட்டங்களைச் சிதைக்கின்றன.

எமது போராட்டத்திற்குப் புலம்பெயர் உறவுகள் மற்றும் ஏனைய தரப்பினர் ஆதரவினை வழங்கி வரும் நிலையில் இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் எம்மை மேலும் வேதனைக்குள்ளாக்குகின்றன. இந்த நிலையில் நாம் பல்வேறு இன்னல்களுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் எமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகப் போராடி வரும் எமக்கு இந்த அரசாங்கமோ எமது அரசியல்வாதிகளோ இன்றுவரை தீர்வுகள் எதையும் முன்வைக்கவில்லை.

எனவே இத்தொழிலாளர் தினத்தில் உரிய தரப்பினர் எமக்கான தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டுமென மீண்டும் வலியுறுத்துவதுடன், எமக்கான முடிவுகள் கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து இப்போராட்டத்தினை முன்னெடுப்போம்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments