கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி! - தற்காலிக முனையம் அமைக்க நடவடிக்கை


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக முனையமொன்று அமைக்கப்படவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். இந்த முனையத்தை அமைப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரும் நடவடிக்கை ஜூன் மாதத்துடன் முடிவடைவதுடன், கட்டுமானப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்றும் கூறினார். இது மாத்திரமன்றி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலையான இரண்டாவது முனையத்தை அமைப்பதற்கு புதிதாக கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதற்காக ஏற்கனவே கோரப்பட்ட கேள்விப்பத்திரத்துக்கு அமைய ஜய்க்கா நிறுவனம் வழங்கிய ஒப்பந்தக் கட்டணம், பொறியியல் ரீதியான மதிப்பீட்டைவிட 45 வீதம் அதிகமானது. எனவே இந்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு புதிய கேள்விப்பத்திரம் கோரப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் சரக்குக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இங்கு இரண்டாவது ஓடுதளமொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார். அத்துடன், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பயணிகளுக்கு நட்புறவான சேவையை வழங்குவதற்கு பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

No comments