கோத்தாவின் கொலையாளிகளுடன் ஈபிடிபி யோகேஸ்வரி கூட்டு?


யாழ்.குடாநாட்டில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் இரகசிய செயற்பாட்டு அணியினருடனும் முன்னாள் ஈபிடிபி சார்பு யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் இணைந்து செயற்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது.  

நல்லூர் சங்கிலியன் வீதியில் அமைந்திருந்த மாநகரசபை கட்டிடத்தினை இப்பிரிவினருன்கு யோகேஸ்வரி பற்குணம் வழங்கியிருந்தமை அம்பலமாகியுள்ளது.

குறித்த கட்டடத்தில் கர்ப்பிணி பெண்களிற்கென நடத்தப்பட்டு வந்த ஆரம்ப சுகாதார சிகிச்சை நிலையத்தை இழுத்து மூடிய பின்னரே அவ்வாறு வழங்கியிருந்தமையும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே அக்கட்டிடத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் 22 மாதங்களாக வெளியார் வீட்டில் வாடகை அடிப்படையில் இயங்கியது. இதற்காக மாதம் ஒன்றிற்கு 13 ஆயிரம் ரூபா வீதம்  பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் இரண்டு இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பணம் வீணடிக்கப்பட்டுமுள்ளது. 

இதனிடையே குறிப்பிட்ட யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராசா சங்கிலியன் வீதியில் இருந்த கட்டிடம் புலனாய்வாளர்களிற்கு வழங்கப்படவில்லை. அப்பகுதியில் கால்நடை  திருட்டு இடம்பெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்த சங்கிலியன் வீதியில் ஓர் காவல்துறை நிலையத்தை அமைக்குமாறு மாவட்டக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டமையினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியில் உடனடியாக ஓர் இடத்தை வழங்குமாறு பணித்தார். அதன் அடிப்படையிலேயே காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதே அன்றி புலனாய்வாளர்களிற்கு வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டடத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் இரகசிய செயற்பாட்டு அணியினர் பணியாற்றியிருந்ததுடன் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களை அங்கிருந்தே செயற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments