முள்ளிவாய்க்கால் அவலத்தை வடமாகாணசபை சுமக்கவில்லை!


தமிழர் இனவழிப்பு நினைவு நாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு இந்து அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களினை முன்வைக்கும் போதே அவர்கள் இதனை வலியுறுத்தியிருந்தனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அகில உலக சைவகுருமார் சபை தலைவர் பாலகுமாரகுரு மற்றும் இலங்கை போக்குவரத்துசபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள் பிரகாஸ் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

வடமாகாணசபையில் உள்ள எவரிற்குமே முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் வலி தெரியாது.அவர்கள் எவரும் அதில் பாதிக்கப்பட்டவர்களுமல்ல. நாம் முள்ளிவாய்க்காலில் இறுதி கணம் வரை துன்பங்களை அனுபவித்து வந்தவர்கள். ஆயிரமாயிரமாக கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களது அழுகுரல்கள் இப்பொழுதும் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபமொன்றை அமைக்கப்போவதாக வடமாகாணசபை அறிவித்து மூன்றுவருடங்களாகின்றது.இன்று வரை அவர்கள் எந்தவொரு துரும்பையும் செய்திருக்கவில்லை.

இந்நிலையில் இறுதி யுத்ததில் மாணவர்களாக முள்ளிவாய்க்கால் அவலங்களை சந்தித்த மாணவர்கள் இப்பொழுது பல்கலைக்கழக மாணவர்களாக நினைவேந்தலை நடத்தமுற்பட்டுள்ளனர்.

அவர்களது முயற்சிக்கு வடமாகாணசபை ஒத்துழைக்கவேண்டும்.மக்களது உணர்வுகளை வடமாகாணசபையும் முதலமைச்சரும் புரிந்துகொள்ளவேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

No comments