அமைச்சர்களை போன்ற அதிகாரிகளும் வெளியேற்றப்படவேண்டும்!


ஊழல்குற்றச்சாட்டுக்களிற்கும் வினைத்திறமையின்மை குற்றச்சாட்டுக்குள்ளமாகிய வடமாகாண அமைச்சர்களை பதவியிலிருந்து கடந்த ஆண்டில் விரட்ட முடிந்த வடமாகாண முதலமைச்சர் அதேபோன்று வினைத்திறனற்ற அதிகாரிகள் தொடர்பிலும் நடவடிக்கையெடுக்க முன்வரவேண்டுமென வைத்தியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணம் முதல் அனைத்து மாகாணங்களிலும் வைத்தியர்களிற்குரிய நிலுவை கொடுப்பனவுகள் செய்யப்பட்டுவிட்டன. ஆனால் வடக்கில் மட்டும் கொடுப்பனவுகள் இழுபறிப்பட்டு செல்கின்றதென குற்றஞ்சாட்டினர்.

போதியளவில் வைத்தியர்கள் இன்மையால் வைத்திய சங்கம் யாழ்.போதனாவைத்தியசாலையிலிருந்து 80 மூத்த வைத்திய அதிகாரிகளை பிரதேச வைத்தியசாலைகளிற்கு இடமாற்றம் செய்திருந்தோம்.பலத்த எதிர்ப்பின் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையால் தற்போது குறைந்த அளவிலேனும் வைத்தியர்கள் சேவையில் அனைத்து வைத்தியசாலைகளிலும் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.மறுபுறம் போதிய வைத்தியர்கள் இன்மையால் அவர்கள் தொடர்;ச்சியாக பணியாற்றிவருகின்றனர். 

இதனால் அவர்களிற்குரிய மேலதிக நேரக்கொடுப்பனவுகளினை மேற்கொள்ளவேண்டியது வடமாகாண சுகாதார அமைச்சின் கடமையாகும்.
குறித்த வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிற்கு சென்றால் பெறுகின்ற பலாபலன்கள் இதைவிட பலவென்பது அனைவரிற்கும் தெரியும்.

வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் பிரதிப்பிரதம செயலாளர் நிதியினது வினைத்திறன் மற்றும் பொறுப்பற்ற தன்மை காரணமாவே இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாம் போராடினால் தான் மத்திய அரசு நிதியை விடுவிக்குமென்றால் இந்த அதிகாரிகள் தேவையில்லை.குறிப்பாக தேவையற்ற சுகாதார அமைச்சினை கலைத்துவிட்டு அதற்கு செலவிடும் நிதியை வைத்தியர்களது கொடுப்பனவுகளை மேற்கொள்ள பயன்படுத்தலாமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வைத்தியர்களது கொடுப்பனவு பிரச்சினைகளை விரைந்து தீர்க்காவிடின் தாங்கள் கண்டனபேரணியொன்றை நடத்துவதுடன் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே இன்று வடமாகாணம் தழுவிய வகையில் வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments