மன்னார் கொக்குப்படையானில் முஸ்லிங்களைக் குடியேற்ற முயற்சி!

மன்னார் - முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாயக் காணியில், அரபு நாடொன்றின் நிதியுதவியுடன், வேறு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களைக் குடியேற்றம் செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும், அவ்வீட்டுத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி, காணியை மீட்டுத்தருமாறு, அக்கிராம மக்களால், முசலி பிரதேச செயலகத்திடம், நேற்று (08) மகஜரொன்று கையளிக்கப்பட்டது. 

கொக்குப்படையான் கிராம மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டில், நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துச் சென்று, மீண்டும் 10 வருடங்களின் பின், குறித்த கிராமத்தில் மீள்குடியேறினர்.

இதன்போது, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சிலரது காணி உரிமங்கள் தவறவிடப்பட்ட போதும், பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் காணி ஆவணங்கள் வழங்கப்பட்டன. 

இந்நிலையிலேயே, குறித்த காணியில் வீட்டுத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதென, அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக, கடந்த 5ஆம் திகதியன்று, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் குறிப்பிடப்பட்ட மகஜரொன்று, முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமாரிடம், கிராம மக்கள் நேற்றுக் கையளித்தனர். 

காணிக்குரிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு, அக்காணியை நீதியான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, பிரதேச செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.  

No comments