சபாநாயகர் ஆசனத்தில் அமரும் சிறிலங்கா அதிபர்


சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் முடக்கப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு மீண்டும் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது. நாளை மறுநாள் – மே 8ஆம் நாள் பிற்பகல் 2.15 மணியளவில் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைப்பார்.
புதிய நாடாளுமன்றம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்படும் போது இடம்பெறுவது போன்ற சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகள் இதன் போதும் இடம்பெறும். சிறிலங்கா அதிபருக்கு 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அரங்கு மூடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட அழைப்பாளர்கள் மாத்திரம் இந்த ஆரம்ப நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வாசிப்பார்.
இந்த கொள்கை அறிக்கை மீது வியாழக்கிழமை விவாதம் நடத்தப்படவுள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அதிபருக்கான அணிவகுப்பு மரியாதை தொடர்பான ஒத்திகைகள் நேற்று இடம்பெற்றன.

No comments