மே18 தேசிய துக்க நாள்! அனைவரும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுங்கள்!


“தமிழினப் படுகொலை வாரம் மே 12 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த வாரத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். இதன் இறுதி நாளான மே 18 ஆம் திகதியை தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக நினைவுகூர முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூட வேண்டும்” என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.ஊடாக அமையத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில்:-

“தமிழின படுகொலையானது உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு இடம்பெற்று மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந் நாளினை தமிழ் மக்கள் அனைவரும் இனப்படுகொலை நாளாக அனுஸ்டித்து வருவதுடன் மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் வரை தமிழின படுகொலை வாரமாகவும் அனுஸ்டித்து வருகின்றார்கள்.

“மே மாதம் 18 ஆம் திகதியை வடக்கு மாகாண சபை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனவே அன்றைய நாளில் அனைத்து   வியாபார நிலையங்களிலும், வீடுகளிலும் கறுப்பு கொடிகளை பறக்க விட்டும், களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்தும் எமது மக்கள் உணர்வுபூர்வமாகவும் அமைதியாகவும் தேசிய துக்க நாளை கடைப்பிடிக்க வேண்டும்”

அந்தவகையில் மே மாதம் 12ஆம் திகதி செம்மணியில் பல்லாயிரக்காணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காலை 9.30 மணிக்கு இடம்பெறும். அன்று மாலை 4.30 மணிக்கு மன்னார் உயிலங்குளத்தில் இடம்பெற்ற படுகொலைக்கானதும், அன்று மாலை 06 மணிக்கு கிளிநொச்சி முளங்காவிலில் இடம்பெற்ற படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வும் இடம்பெறும்.

இதே போன்று 13 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வவுனியா பண்டார வன்னியன் நினைவிடத்திலும், 14ஆம், 15ஆம் திகதிகளில் யாழ் குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளிலும் நெடுந்தீவில் இடம்பெற்ற குமுதினி படுகொலை ஆகியவற்றுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறும்.

16ஆம், 17ஆம் திகதிகளில் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும். இதனை தொடர்ந்து இறுதி நாளான மே 18 ஆம் திகதி காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் காலை 10.30 மணிக்கு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும்.

இதன்போது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரால் தேசிய துக்க தினத்துக்கான பிரகடனம் செய்யப்படும். அந்தவகையில் அன்றைய நாள் அவ்விடத்தில் கட்சி பேதங்களை மறந்து, அனைவரும் ஒன்றாக கூடி பல்லாயிரக்கனக்கான அஞ்சலி தீபங்களை ஏற்றி நினைவுகூர வேண்டும்.

இவ்வாறு நாம் மேற்கொள்வதனுடாகவே தமிழ் மக்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை என்பதையும், அதற்கான நீதிகிடைக்க வேண்டும் என்ற செய்திகளை சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உறுதியாக கூற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments