சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் 5-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில ஊர்களில் போராட்டக்காரர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலைகளில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடற்கரை காமராஜர் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்டாலின் உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சிறிது நேரம் கழித்து போலீசார் விடுவித்தனர். இந்த நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடையை மீறி போராட்டம், போக்குவரத்து இடயூறு ஆகிய பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

No comments