சிறுபான்மையினர் நீட்டிய கைகளால் பேரினவாத யானையின் தலை தப்பியது - பனங்காட்டான்

ஆறு கடக்கும்வரை அண்ணன் தம்பி என்பதுபோல கூட்டமைப்பின் பத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற ரணில் உறுதியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில் ஏற்றுக் கொண்டவைகளை ஜனாதிபதி மைத்திரி ஏற்றுக் கொண்டாரா? இவைகளை ரணில் நடைமுறைப்படுத்த அவர் சம்மதிப்பாரா? ரணிலுக்கு ஆதரவாக கூட்டமைப்பு செயற்படக்கூடாதென்று அறிவுரை வழங்கிய மைத்திரி கூட்டமைப்பை எந்த இடத்தில் நிறுத்தப் போகிறார்?

சிங்கள தேசத்து அரசியலில் மிக முக்கிய நாடகமொன்றின் ஓரங்கம் நடந்து முடிந்துள்ளது.

பிரதமர் பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக, அவரது அமைச்சரவையில் இருப்பவர்களே வாக்களித்த நம்பிக்கையில்லாத் தீர்மானமே இது.

இந்தத் தீர்மானம் தோற்றுவிட்டது என்று சொல்வதிலும் பார்க்க, தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று சொல்வதே சரி.

இதிலுள்ள இன்னொரு விசேடம் என்னவெனில், பிரதமருடன் கூட்டுச் சேர்ந்து ஜனாதிபதி பதவியைப் பெற்றவரே அந்தப் பிரதமரை பதவியிலிருந்த இறக்க அல்லது நீக்க நடவடிக்கை எடுத்தது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் இந்தப் பத்தியில், ரணிலைப் பதவியிறக்குவது சாத்தியமற்றது என்று சுட்டி எழுதப்பட்டதை இப்போது ஞாபகப்படுத்துவது பொருத்தமானது.

ரணிலின் வம்ச உறவுகளையும், அவரது அரசியல் வம்சாவழியையும் அறிந்தவர்களுக்கு அவரை ஏன் வீழ்த்த முடியாதென்பது நன்றாகப் புரியும்.

கிழட்டு நரி என்று வர்ணிக்கப்படும் இலங்கையின் சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகன் முறையானவர் ரணில்.

ஜே.ஆரின் தாயாரின் சகோதரனான டி.ஆர்.விஜேவர்த்தனவின் மகளே ரணிலின் தாயார்.

தமிழர் முறைப்படி பார்க்கின் ஜே.ஆர். திருமணம் செய்யும் முறையிலான மச்சாள் ரணிலின் தாயார்.

லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஸ்தாபகரே டி.ஆர்.விஜேவர்த்தன என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.

ஜே.ஆர். முதன்முதலாக களனித்தொகுதி ஊடாகவே நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர். இந்தத் தொகுதியின் பிரதான அமைப்பாளராக ரணிலை 1970ம் ஆண்டில் ஜே.ஆர். நியமித்தபோது ரணிலுக்கு வயது 21 மட்டுமே.

களனியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட பியகம தொகுதியில் 1977ம் ஆண்டுத் தேர்தலில் ரணில் போட்டியிட்டு வெற்றி பெற, அவரை முதலில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமித்த ஜே.ஆர். குறுகிய காலத்தில் இளைஞர் விவகாரம், வேலை வாய்ப்பு, கல்வி என்று பல முக்கிய அமைச்சுகளுக்கு அவரை அமைச்சராக நியமித்து பக்குவமாக வளர்த்தெடுத்தார்.

தமது அரசியல் வாரிசாக ரணிலை உருவாக்கிய ஜே.ஆர்., அரசியல் நெளிவு சுழிவுகளையும் தந்திரோபாயங்களையும் அவருக்கு முறையாக கற்றுக் கொடுத்தார்.
1993ல் ஜனாதிபதி பிரேமதாச மரணமாக, பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியானார். அப்போது முதன்முறையாக ரணிலுக்கு பிரதமர் பதவி கிடைத்தது.

2001ம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்குவர ரணில் இரண்டாவது தடவையாகவும் பிரதமரானார்.

ஆனால், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா 2004ல் ரணிலின் ஆட்சியைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினார்.

இதனால் 2015ம் ஆண்டுவரை இவர் எதிர்க்கட்சித் தலைவராகும் நிலையேற்பட்டது.

சந்திரிகா, மைத்திரி, ரணில் ஆகியோரின் கூட்டு ஒரு புதிய ஆட்சியை இலங்கையில் ஏற்படுத்தியது. இதற்கு நல்லாட்சி என்று பெயரிட்டனர்.

சிறுபான்மையின மக்கள் - முக்கியமாக வடக்கு மற்றும் கிழக்குவாழ் மக்களே 2015ம் ஆண்டுத் தேர்தல்களில் மைத்திரியை ஜனாதிபதியாகவும், ரணிலை பிரதமராகவும் அமர்த்தியதென்பதை அவர்களே பலதடவை வாக்கு மூலமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியென்றும், இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் என்றும் சொல்லப்பட்டாலும், இவர்கள் அரசின் பங்காளிகள் போலவே கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வந்தனர்.

இப்போது, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு நடைபெற்றபோது, இதனை கூட்டமைப்பு சந்தேகத்துக்கிடமின்றி ரணிலுக்கு வழங்கிய வாக்குப்பலத்தின் மூலம் நிரூபித்துள்ளது.

எனவே, இனிமேல் கூட்டமைப்பை எதிர்க்கட்சி என்று அழைப்பது பொருத்தமா என்ற கேள்வியும் எழுகிறது.

நாடாளுமன்ற அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்பது பிரதமர் பதவிக்கு சமமானது. நிழல் அரசாங்கத்தின் பிரதமர் என்றும் எதிர்க்கட்சித் தலைவரை ஜனநாயக மரபில் கூறுவர்.

ஆனால், இலங்கை அரசமைப்பில் கூட்டமைப்பு ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்றி பிரதமர் பதவிக்கு வர முடியாதென்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த வகையில், ஒருபோதும் தங்களை வீழ்த்த முடியாதிருக்கும் கூட்டமைப்பை எதிர்க்கட்சித் தலைமையுடன் வைத்திருக்க ரணில் தரப்பு விரும்பும் என்பதே யதார்த்தம்.

ரணிலின் இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமான கூட்டமைப்பு, அவருக்கு ஆதரவாக வழங்கிய வாக்குகளினூடாக அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.

நல்லாட்சி என்று கூறப்படும் இன்றைய அரசாட்சி ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியையும், மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்த கூட்டு.

மைத்திரி ஜனாதிபதியாக வருவதற்கு முன்னைய பத்தாண்டுகளாக மகிந்தவின் அரசில் முக்கிய அமைச்சர் பதவியை தம்வயம் வைத்திருந்த மகிந்தவின் தோழன்புள்ள நண்பராகவிருந்தவர்.

மைத்திரி புதிய ஜனாதிபதியாகவும், ரணில் புதிய பிரதமராகவும் 2015ல் தெரிவாவதற்கு தமிழர் வாக்குகளை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

ரணிலுடன் இவர்களுக்கிருந்த நெருங்கிய தொடர்பே இந்த ஆதரவுத் தளத்துக்குக் காரணம். மைத்திரியுடன் அப்போது கூட்டமைப்புக்கு நெருங்கிய உறவிருக்கவில்லை.

இந்தப் பின்னணியில் பார்க்கையில், ரணிலை பிரதமர் பதவியில் தக்க வைப்பதற்கு கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்குமென்பது அரசியல் தெரிந்த அனைவரும் அறிந்த ரகசியம்.

இது மைத்திரிக்குத் தெரியாததல்ல.

ரணிலின் பதவி பறிபோகுமானால், அல்லது ரணில் தரப்பு அரசுக்கூட்டிலிருந்து விலகுமானால் எதிர்க்கட்சி அந்தஸ்தும் அதன் தலைமைப் பதவியும் கூட்டமைப்பிடமிருந்து பறிபோகும்.

இதனை நன்கு புரிந்து கொண்டே கூட்டமைப்பும் ரணிலும் தங்கள் காய்களை நகர்த்தினர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அதனைக் கொண்டுவந்த மகிந்த அணிக்கு 76 வாக்குகளே கிடைத்தன.

ரணிலுக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர்.

ஆட்சித்தரப்பிலிருந்து சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் உட்பட 26 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதனால் 46 வாக்குகளால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரவூப் ஹக்கிமின் முஸ்லிம் காங்கிரஸ், றிசாட் பதியுதினின் முஸ்லிம் கட்சி, மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கூட்டணி ஆகியவையும் வேறு சில ஒற்றை அங்கத்தவர் கட்சிகளும் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்தனர்.

எண்ணிக்கையில் பார்க்கும்போது, மேற்சொன்ன சிறுபான்மைக் கட்சிகளின் 30க்கும் அதிகமான வாக்குகளை ரணில் பெற்றுள்ளார்.

சிறுபான்மைக் கட்சிகள் நீட்டிய கைகள், பேரினவாத யானைத் தலையை காப்பாற்றியுள்ளது.


கூட்டமைப்பு விடுத்த 10 நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதாக ரணில் உறுதியளித்ததாலேயே அவரை ஆதரித்து கூட்டமைப்பு வாக்களித்ததாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் சிறீதரனும், சரவணபவானும் ரணிலுக்கு ஆதரவளிப்பதை விரும்பவில்லையாயினும் கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று ரணிலுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.

இருப்பினும் சரவணபவானின் யாழ். உதயன் பத்திரிகை இது தொடர்பாக அதன் ஆசிரியர் தலையங்கத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

“சலுகையா, உரிமையா? எதைக்கேட்கிறது கூட்டமைப்பு” என்பது இதன் தலைப்பு.

கூட்டமைப்பு கேட்ட பத்தில், தமிழரின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு, அரச மறுசீரமைப்பு என்பன தொடர வேண்டுமென்பது முதலாவது.

இங்கு, புதிய அரசியலமைப்பு என்று சொல்லப்படவில்லை. அரச மறுசீரமைப்பு என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியானால் இதுவரை கூறிவந்த புதிய அரசியலமைப்பு என்பது வசதி கருதி மறக்கப்பட்டதாக்கப்பட்டுள்ளதா?

மிகுதி ஒன்பது கோரிக்கைகளும் உரிமைகளன்றி சலுகைகளாகவே காணப்படுகின்றன.

ஆறு கடக்கும்வரை அண்ணன் தம்பி என்பதுபோல கூட்டமைப்பின் பத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற ரணில் உறுதியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் ஏற்றுக் கொண்டவைகளை ஜனாதிபதி மைத்திரி ஏற்றுக் கொண்டாரா?

இவைகளை ரணில் நடைமுறைப்படுத்த அவர் சம்மதிப்பாரா?

ரணிலுக்கு ஆதரவாக கூட்டமைப்பு செயற்படக்கூடாதென்று அறிவுரை வழங்கிய மைத்திரி கூட்டமைப்பை எந்த இடத்தில் நிறுத்தப் போகிறார்?

நம்பிக்கையில்லாத் தீர்மான தோல்வி இந்த நாடகத்தின் முதற்காட்சி.

இன்னமும் பல காட்சிகள் தொடரக் காத்திருக்கின்றன.

ரணிலைப் பலப்படுத்தவும், மைத்திரியைப் பலவீனப்படுத்தவும் ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை சிறீமான் பொதுஜனங்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.


No comments