அரசியல் கைதிகள் விடுதலை:அரசிற்கோ கூட்டமைப்பிற்கோ அக்கறையில்லை!


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்கைதி  சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரினை விடுவிப்பாரென்று நான் நம்பவில்லை.தற்போது உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் மஹிந்தவை விட தன்னையொரு தீவிர இனவாதியாக தெற்கில் காட்டிக்கொள்ளவேண்டிய தேவை மைத்திரிக்கு இருப்பதால் அவ்வாறு விடுவிடுப்பினை செய்வார் என நம்பவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார் என்ற ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதி வீணடித்துள்ளராரெயென்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர் கூட்டமைப்பு தலைமை முன்னர் இதே மைத்திரிக்கு ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்று ஆதரவளித்திருந்தது. இப்போது ரணிலை காப்பாற்றவும் முண்டு கொடுத்திருக்கின்றது.

ஏற்கனவே மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கைக்கு மேலும் ஓராண்டு கால நீடிப்பிற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்திருக்கின்றது. ஆகக்குறைந்தது அரசியல் கைதிகளது விடுதலைக்கு ஒரு நடவடிக்கையினையேனும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டமைப்பு தலைமை செய்யவில்லை. 

சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர் மகசின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ஆனந்தசுதாகரின் மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்டநிலையில் கடந்த மாதம் உயிரிழந்தார். மனைவியின் இறுதிக் கிரியைகளுக்காக ஆனந்தசுதாகர் கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.
மகசின் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட அவர் 3 மணிநேரங்களில் மீள அழைத்துச் செல்லப்பட்டார்.

தனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தவேளை ஆனந்தசுதாகர் அரசியல் கைதியாக தடுப்பில்வைக்கப்பட்டார். அதனால் தந்தையின் அரவணைப்பை நாடிய அவரது மகள் அவரைப் பிரிய விரும்பவில்லை.
இந்த நிலையில் தாயை இழந்து பெற்றோரின் ஆதரவின்றி தவிக்கும் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன் மற்றும் மகள் சங்கீதா இருவரும் தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என ஜனாதிபதியிடம் கருணை மனு முன்வைத்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி புத்;தாண்டிற்கு முன்னதாக விடுவிக்கப்போவதாக தெரிவித்திருந்த நிலையில் மைத்திரி தனது குடும்பத்தவர்களுடன் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுகின்றார்.ஆனால் அநாதைகளாக நிற்கும் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன் மற்றும் மகள் சங்கீதா இருவரும் இம்முறையும் ஏமாற்றத்துடன் புத்தாண்டை கடந்து சென்றுள்ளனர்.தமிழ் மக்கள் மீண்டும்  மீண்டும் தமிழ் மக்களிடம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே அனுராதபுரம் சிறைக்கு நாம் விஜயம் செய்தபோது இராசவள்ளல் தபோறூபன் , மதியரசன் சுலக்சன் உள்ளிட்ட 07 அரசியல் கைதிகளை சந்தித்திருந்தோம்.

அரசியல் கைதியான இராசவள்ளல் தபோறூபன் இன்றுடன் ஜந்தாவது நாளாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த நான்கு வருடங்களாக தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தபோறூபன் தன்னை பொதுச் சிறைக்கு மாற்றுமாறு கூறியே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

தான் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறியிருக்கும் அரசியல் கைதியான தபோறூபன் இருட்டறை சிறைக்கூடத்துக்குள்ளேயே தனித்து வைக்கப்பட்டுள்ளார் அங்கு வாளி ஒன்றினுள்ளும் கோப்பையொன்றினுள்ளும் இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்கு  தினமும் ஒரு தடவை மட்டுமே அவற்றினை சுத்தப்படுத்த தன்னை வெளியே அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்படுவதற்கு இலங்கை அரசு மட்டுமல்ல அதற்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பும் பொறுப்புக்கூறவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments