வலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணியின் அளவு குறைகிறது?


வலி.வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அடுத்தவாரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. பொதுமக்களின் 500 ஏக்கர் காணிகள் மாத்திரமே வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 16ஆம் நாள் தொடக்கம், பொன்னாலை- பருத்தித்துறை வீதி வழியாக பொதுமக்கள் பகலில் சுதந்திரமாகச் சென்று வருவதற்கும் அனுமதிக்கப்படும். ஏற்கனவே பொதுமக்களின் பயணத்துக்காக இந்த வீதி திறந்து விடப்பட்ட போதும், அரச பேருந்துகள் இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது இந்த வீதியை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவுள்ளது” என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். முன்னதாக, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில், வலி.வடக்கில் 650 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments