பௌத்த மதத்தினரின் வழிபாட்டுக்காக தொழிலாளர் உரிமையை நிராகரிப்பதா? பனங்காட்டான்

1968ல் வெசாக் தினமும் தொழிலாளர் தினமும் மே முதலாம் திகதியன்று ஒரே நாளில் வந்தபோது யாழ்ப்பாணத்தில், எவ்வாறு மே தினம் கொண்டாடப்பட்டது? இவ்வருடம் வெசாக் நாளன்று யாழ்ப்பாணத்தில் மே தினத்தை ஜே.வி.பி.யினர் நடத்த முன்வந்திருப்பதன் உள்நோக்கம் என்ன?

இலங்கையில் வெசாக் தினம் இம்முறை சர்வதேச தொழிலாளர்கள் தினமான மே மாதம் முதலாம் திகதியன்று வருவதால் அன்றைய தினம் இலங்கையிலுள்ள தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாட முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அமைச்சரவை இதனை ஒரு தீர்மானமாக எடுத்து, மே மாதம் 7ம் திகதியில் மே தினத்தைக் கொண்டாடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதையும், இந்நாட்டின் உத்தியோகபூர்வ மதம் பௌத்தமே என்பதையும் மீள வலியுறுத்துறுவதாக அரசாங்கத்தின் இந்த முடிவு அமைந்துள்ளது.

பௌத்தர்களல்லாத மற்றைய மதத்தினரின் அமைப்புகளோ பிரதிநிதிகளோ அரசாங்கத்தின் இந்த முடிவை மறுக்கவில்லையென்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

முக்கியமாக இன்றைய இடதுசாரிகள் தங்கள் வாக்கு வங்கியை வற்ற விடாது பாதுகாத்துக் கொள்ளவும், இதன் தலைமைகள் சிங்கள பௌத்தர்களாக இருப்பதாலும் எந்த ஆட்சேபமுமின்றி அரசாங்கத்தின் முடிவை உள்வாங்கிக் கொண்டன.

இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்ட மே மாத முதலாம் திகதிய தொழிலாளர் தினம், இலரங்கையில் ஒரு வாரத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. மட்டும் சிறிதளவில் அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளாது, மே முதலாம் திகதியன்றே ஒரேயொரு மாவட்டத்தில் மட்டும் இதனை நிகழ்த்த முடிவெடுத்துள்ளதை பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் ஜே.வி.பி, வடஇலங்கையின் பக்கம் திரும்பி யாழ்ப்பாணத்தில் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தை நடத்த முடிவெடுத்திருப்பதன் உள்நோக்கம் புரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் பௌத்தர்கள் பெருமளவில் இல்லாததால் அங்கு வெசாக் தினத்தைப் பாதிக்காத வகையில் மே தினத்தை நடத்த முடியுமென இவர்கள் எண்ணியிருக்கக்கூடும். எதுவானாலும், இவர்களின் இடத்தெரிவு ஆழமான சிந்தனைக்குரியது.

மே தினத்தன்று வெசாக் தினமும் அமையுமானால், மே தினத்தைப் பின்போடுவது இலங்கையின் சிங்கள பௌத்த அரசியல் வரலாற்றில் இதுதான் முதற்தடவையன்று.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான சம்பவமொன்றை இவ்வேளையில் நினைவுகூருவது பொருத்தமானது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

1965 முதல் 1970 வரையான காலத்தை இலங்கையின் முதலாவது தேசிய அரசாங்கம் ஆட்சி புரிந்தது. இதன் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க இருந்தார். இவரது தேசிய அரசில் அங்கம் வகித்த் பிரமுகர்கள் எவரும் இப்போது அரசியலில் இல்லை.

1968ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினமன்று வெசாக் தினமும் ஒன்றாக வந்தது. பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கள அரசாங்கம் மே தினத்தை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்தது. பிரதான அரசியற் கட்சிகள் அனைத்தும் இதனை ஏற்றுக் கொண்டன.

தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக செனட்டர் மு. திருச்செல்வம் உள்;ராட்சி அமைச்சராக பதவி வகித்தார். இதனாலோ என்னவோ, தமிழ் அரசுக் கட்சி  அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக் கொண்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் இலங்கையின் அதிகாரபூர்வ மதம் என்பதை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டதை இதனூடாகப் பார்க்கலாம்.

ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை அரசாங்கத்தின் இந்த முடிவை முழுமையாக எதிர்த்தது. மே முதலாம் திகதியே யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்தப்படுமெனவும் அறிவித்தது.

இதற்கு பொலிஸ் அனுமதி கிடைக்கவில்லை. அதனை ஏற்றுக் கொள்ளாத மேற்படி யாழ்ப்பாணக் கிளையின் செயற்பாட்டாளரான கே.ஏ. சுப்பிரமணியம் மே தின ஏற்பாடுகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

இதனால் பொலிசார் தீவிரமான செயற்பாட்டில் இறங்கினர். எக்காரணம் கொண்டும் யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்த அனுமதிக்கக்கூடாதென்ற உத்தரவு கொழும்பிலிருந்து வடமாகாண பொலிஸ் சுப்பிரிண்டனுக்குப் பிறப்பிக்கப்பட்டது.

அப்போது பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர். சுந்தரலிங்கம் பணிபுரிந்தார். குடாநாட்டு ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சாமர்த்தியசாலி இவர். உதவி பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர்.தவராசா இருந்தார். மிகக்கடும்போக்கான, ஆனால் நேர்மையான அதிகாரி இவர்.

அவ்வேளை நான் யாழ்ப்பாணம் ஷஈழநாடு| பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக இருந்தேன். அமரர்களான செல்லத்துரை (வீரகேசரி), பரராஜசிங்கம் (தினகரன்), கதிரவேலு (டெய்லி நியூஸ்), புஸ்பரத்தினம் (டெய்லி மிறர்), அரசரத்தினம் (தினபதி) ஆகியோர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களாக அப்போது பணிபுரிந்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சுப்பிரமணியம் ஊடகவியலாளர்களுடன் அந்நியோன்யமாகப் பழகுபவர். சீனப் படங்களுடனான கலண்டர்கள், பலவர்ண அச்சுப் புத்தகங்கள் போன்றவற்றை வருடாவருடம் அன்பளிப்பாக வழங்குபவர்.

இதனால், இவர்கள் நடத்தவுள்ள மே தினக்கூட்ட இடத்தை அறிவதற்காக பொலிஸ் சுப்பிரிண்டன் ஊடகவியலாளரான எங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார்.

மே மாதம் முதலாம் திகதி எங்களை எங்கள் அலுவலகத்திலேயே இருக்குமாறும், உரிய நேரத்தில் தாம் தொடர்பு கொள்வதாகவும் திரு. சுப்பிரமணியம் ஏற்கனவே எம்மிடம் கூறியிருந்தார். அன்று காலையிலிருந்து நானும் மற்றைய ஊடகவியலாளர்களும் அவரது தொலைபேசி அழைப்புக்காக அதனருகில் தவம் கிடந்தோம். (அப்போது செல்லிடத் தொலைபேசிகள், முகநூல்கள் கிடையாது).

மறுபுறத்தில், வெளிமாகாணங்களிலிருந்து 2000க்கும் அதிகமான பொலிசார் யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தனர். கலகம் அடக்கும் பொலிசாரும் ஒருபுறத்தில். யுத்த பூமிபோல யாழ்ப்பாணம் அன்று காட்சியளித்தது.

குடாநாட்டில் சாதி ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்றவைகளில் நீண்டகாலமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். சங்கானையில் நிற்சாமம், தென்மராட்சியில் மந்துவில், வடமராட்சியில் நெல்லியடி, வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம், யாழ்நகரில் ஆரியகுளத்தடி என்பவை இவர்களின் போராட்டக் கோட்டைகளாக விளங்கிய இடங்கள்.

இதனால், இவ்விடங்களில் மே தின ஊர்வலமோ கூட்டமோ நடத்தப்படலாமென்ற சந்தேகத்தில் பெருமளவான பொலிசார் ஆயுதபாணிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

மாலை சுமார் ஐந்து மணிவரை எந்தவித அசமாத்தமும் இல்லை. யாழ்நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது, ஆங்காங்கே பொலிஸ் ஜீப் வண்டிகள் உறுமிக் கொண்டு திரிந்தன. சுப்பிரமணியம் அவர்களின் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்து நாம் களைத்துப் போயிருந்தோம்.

ஐந்தேகால் மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் வின்ட்சர் தியேட்டர் அமைந்திருக்கும் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதிச் சந்திக்கு வருமாறு ஓர் அநாமதேயக் குரல் தெரிவித்தது. அடுத்த விபரம் கேட்பதற்கிடையில் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சிலவேளை இது பொலிசாரின் தந்திர யுக்தியாக இருக்கலாமோவெனவும் எண்ணத் தோன்றியது. ஆனாலும் அந்தத் தொலைபேசி அழைப்பை நிராகரிக்க முடியவில்லை.

இரண்டு நிமிடங்களில் நான் அவ்விடத்துக்குச் சென்றுவிட்டேன். மற்றைய பத்திரிகை நண்பர்களும் இளைக்கக் களைக்க வந்த சேர்ந்தனர்.

வின்ட்சர் தியேட்டரும் ராஜா தியேட்டரும் அச்சந்தியில் எதிரும் புதிருமாக உள்ளன. பிற்பகல் ஐந்தரை மணியளவில் இரண்டு தியேட்டர்களிலும் 2:30 மணி பகல் படக்காட்சி முடிந்து சுமார் 500க்கும் அதிகமானவர்கள் வெளியே வந்தனர். வழக்கமாக படம் பார்க்க வரும் கூட்டமென்று நாம் நினைத்தோம்.

இரு அணியினரும் ஒன்றாக இணைந்து தங்கள் பொக்கற்றுக்குள் இருந்த சிவப்புத் துணிகளை மேலே உயர்த்தியவாறு திடீரென "தொழிலாளர் வாழ்க" என கோசமெழுப்பினர். எங்கிருந்து வந்ததோ தெரியாது, சிவப்புத் துணியில் எழுதப்பட்ட ஷதொழிலாளர் தினம்| என்ற பெரிய பதாதையை முன்னால் தாங்கிக் கொண்டு இருவர் செல்ல அந்தக் கூட்டம் அவர்கள் பின்னால் வேகமாகக் கோசமிட்டவாறு ஓடிச் சென்றது.

கஸ்தூரியார் வீதி, பள்ளிவாசல் ஒழுங்கை, சப்பாத்துக்கடை ஒழுங்கை, மலாயன் கடைச் சந்தி என்று சகல குறுக்கு ஒழுங்கைகளாலும் ஆறு ஓடுவதுபோல ஆர்ப்பாட்டமிட்டவாறு அவர்கள் ஊர்வலமாகப் பாய்ந்து பாய்ந்து சென்றனர்.

சத்திரத்துச் சந்தி தாண்டி யாழ்ப்பாணம் பெரிய தபாற் கந்தோரடியை (முற்றவெளியின் முன்னால்) ஊர்வலத்தின் முற்பகுதி தாண்டும்போது கே.ஏ.சுப்பிரமணியமும் மற்றும் முக்கியஸ்தர்களும் அங்கு காணப்பட்டனர்.

சில நிமிடங்கள் தாண்டியிருந்தால் ஊர்வலம் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்திருக்கும். அதற்கிடையில் பெரிய ட்ரக் வண்டிகளில் பொலிசார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அவர்களின் குண்டாந்தடிகள் ஊர்வலகாரரை பதம் பார்த்தன. கண்ணீர் புகை பிரயோகம் செய்யப்பட்டது.

கீழே விழுந்த சுப்பிரமணியம் அவர்கள்மீது இலக்கு வைத்து பொலிசார் தாக்கினர். அவர் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். ஆனாலும் ஊர்வலத்தினர் அச்சமடைந்து திரும்பிச் செல்லவில்லை. அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டனர்.

சுப்பிரமணியம் அவர்களை நிலத்தில் இழுத்துச் சென்ற பொலிசார், எதிரே வந்த பஸ் வண்டியின் முன்னால் தூக்கி வீசினர். பஸ் வண்டி அவர்மீது ஏறாத குறை.

பொலிசாரைப் பொறுத்தளவில் மே தினக்கூட்டம் தடுக்கப்பட்டதென்ற நிம்மதி. ஆனால், அதனை ஏற்பாடு செய்தவர்களைப் பொறுத்தமட்டில் வெசாக் தின பிரகடனம் முறியடிக்கப்பட்டு தொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக வெற்றி கண்டது என்ற பெருமை.

இங்கு குறிப்பிடக்கூடிய முக்கியமான ஒன்று, அதனை ஏற்பாடு செய்தவர்களின் அபாரமான திட்டமிடல். எவருக்கும் ஒருபோதும் தெரியாதவாறு சுமார் 500 பேரை பகல் படக்காட்சிக்கு இரண்டு தியேட்டர்களுக்கும் உள்ளே அனுப்பியதும், அவர்களது பொக்கற்றுகளுக்குள் மறைத்து வைத்திருக்கும் வகையில் சிவப்புத் துணிகளைக் கொடுத்தனுப்பியதும் வித்தியாசமான ஏற்பாடு.  எக்காரணம் கொண்டும் இதனை முற்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமல் போனது பொலிசாரின்  புலனாய்வுக்குக் கிடைத்த படுதோல்வி.

நேர்த்தியாக ஏற்பாடான இந்தப் பேரணி, சுமார் ஐந்து நிமிடத்துக்குள் ஒரு மைல் தூரத்தை பாய்ந்து பாய்ந்து சென்று முன்னேறியது பொலிசாரின் கண்களுக்குள் எண்ணெய் ஊற்றியதுபோல.  ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டும் பேரணி ஆரம்பமாவதைத் தடுக்க முடியாமல் போனது தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.

அன்றைய தாக்குதலில் படுகாயமுற்ற திரு.சுப்பிரமணியம் யாழ். மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்றபின் சீனா கொண்டு செல்லப்பட்டு மேற்சிகிச்சை வழங்கப்பட்டது.

அன்று வெசாக் நாளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின நிகழ்வுக்கும், இவ்வருடம் வெசாக் நாளில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்த தீர்மானித்திருப்பதற்கும் இடையில் அரசியல்ரீதியாக எந்த ஒருமைப்பாட்டையும் காணமுடியவில்லை.

யுத்த வலியிலிருந்து மீள முடியாது தவித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில், காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் மத்தியில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணம் சென்று எதற்காக மே தினத்தை நடத்த வேண்டும்?

கொள்கைப்பிடிப்பும் ஆத்மசுத்தியும் இருந்தால் இவர்கள் தங்களுடைய மே தின நிகழ்வை வெசாக் தினத்திலன்று தெற்கிலுள்ள ஏதாவதொரு நகரில் ஏன் நடத்தக்கூடாது?

No comments