கண்கூட திறக்கப்படாத நிலையில் உயிருடன் சிறுத்தை குட்டியொன்று மீட்பு


மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா கவரவில பெரிய சோலங்கந்தை தோட்டத்தில் தேயிலை மலையிலிருந்து 03.04.2018 அன்று காலை 9 மணியளவில் பிறந்து நான்கு அல்லது ஆறு நாள் நிரம்பிய கண்கள் கூட திறக்கப்படாத நிலையில் சிறுத்தை குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணீர் வனஜீவி காரியாலயத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த சிறுத்தை குட்டியினை தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சென்ற நல்லம்மா என்ற பெண்மணி கண்டு தெரிவித்ததனையடுத்து, பொலிஸாருக்கும் நல்லதண்ணீர் வனஜீவி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது.
குறித்த சிறுத்தை குட்டி போசனை செய்யக்கூடிய நிலையில் இல்லாது இருப்பதனால் இதனை உடவல மிருக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணீர் வனஜீவி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சிறுத்தை குட்டியின் தாய் அண்மித்தே இருப்பதனால் அது குட்டியினை தேடி வரக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படட்டுள்ளது.
கடந்த சில வார காலமாக குறித்த தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக பொது மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இதனால் நாளாந்தம் பட்டாசு போடப்பட்ட பின் தேயிலை கொழுந்து பறிக்கச் செல்வதாகவும், இன்றைய தினமும் பட்டாசு வெடித்து விட்டு சென்றதாகவும், இதனல் இந்த குட்டி சிறுத்தையின் தாய் குட்டியினை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

No comments