கொசுவை ஒழிப்பதற்கான புதிய ரேடார் கருவியைக் கண்டுபிடித்தது சீனா!

கொசுவை ஒழிப்பதற்கு சீனாவில் புதிய ரேடார் கருவி ஒன்றைக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏவுகணையில் பயன்படுத்தப்படும் முக்கிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது.

பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த ரேடாரின் உதவியோடு, 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களை அறிந்து கொள்ள முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். ரேடாரில் இருந்து அதிவேகமாக மின்காந்த அலைகள் வெளியேறும் வகையில் அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை, அருகில் உள்ள கொசுக்கள் மீது பட்டுத் திரும்புவதன் மூலம் கொசு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்தக் கருவியின் உதவியால் அந்தக் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள கொசுக்களின் பாலினம், அவற்றின் பறக்கும் வேகம் மற்றும் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட கொசு சாப்பிட்டுள்ளதா அல்லது பசியோடு மனிதர்களைக் கடிக்க சுற்றிக் கொண்டிருக்கிறதா என்பது வரை இந்தக் கருவியின் மூலம் கண்டறியப்படும் என கூறப்படுகிறது. அதன்மூலம் கொசுக்களின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

மற்ற நாடுகளில் பறவைகள் மற்றும் பெரிய பூச்சியினங்களின் நகர்வுகளைக் கண்காணிக்க பொதுமக்களுக்கான ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உலகிலேயே முதன்முறையாக கொசுக்களை கண்காணிக்க சீனா ராணுவ தொழில்நுட்பத்துடன் ரேடாரை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments