சம்பந்தனின் பதவியை பறிக்க இருமுனை நகர்வு!

இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பும் தேசிய அரசிலிருந்து விலகியுள்ள 16 பேரும் தனித்தனியே சபாநாயகரை வலியுறுத்தவுள்ளனர்.

தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் புதுவருடத்துக்கான முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தேசிய அரசிலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கோரவுள்ளனர்.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்துக் கொண்டு அரச சார்பான கொள்கையில் செய்ற்படுதல் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அமைதி காத்து வருவதே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரக் காரணம் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

எனவே நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த எதிர்க்கட்சி அந்தஸ்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணிக்கு வழங்கப்படவேண்டும் என்பதை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் முன்வைக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்னுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரும் தேசிய அரசிலிருந்து விலகியுள்ள 16 உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் குழப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments