என் அருமைத் தமிழ்மக்களே! இன்று ஒவ்வொரு நாளுமே நமக்கு போராட்டம்தான்!

போராட்டம் நம்மீது திணிக்கப்படுகிறது! அதனை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

ஆனால் போராட்ட களத்தில் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டார்கள் தோழர்கள் சிலர்!

அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதேநேரம் இதயத்தைப் பிழியவைக்கும் இத்தகைய செயலில் யாருமே இனி ஈடுபடக் கூடாது என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

எதிரிக்கு ஏமாற்றத்தைக் கொடுக்க வேண்டியவர்கள் தீக்குளித்துத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டுள்ளனர்!

தகாத இந்தப் பாதையை விட்டொழித்து, திடமான போராட்டப் பாதையில் அணிவகுக்குமாறு தமிழ்மக்களை அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி; ஆனால் போரின்றி அமையாது உலகு என்பது பொதுமொழி.

அதனால்தான் நீருக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தப் போராட்டம் எதிரிகளால் நம்மீது திணிக்கப்பட்டது.

அந்த எதிரி இந்திய மத்திய அரசுதான்; தற்போது அது பாஜக மோடி அரசு.

இன்று மாநிலங்களாக இருக்கும் தேசங்களின் ஒப்புதல் இல்லாமலேயே அன்று அவை இணைக்கப்பட்டு இந்தியா உருவாக்கப்பட்டது. அதனால் பெயரளவில்தான் இது கூட்டாட்சி நாடு.

அதிகாரங்கள் மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று பகிரப்பட்டிருந்தாலும், அந்த அதிகாரங்கள் அனைத்திற்குமே ஒப்புதலளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் என்பதுதான் முரண்பாடு.

இந்தக் காரணத்தால்தான் தமிழ்நாட்டை அடக்கி ஆளப் பார்க்கிறது மோடி அரசு.

அதற்குத் தமிழ்நாடு இடம் தராத காரணத்தால்தான் அதை ஒட்டுமொத்தமாகவே அழித்திடவும் பார்க்கிறது மோடி அரசு.

அதற்காகத்தான் அணுவுலை, நியூட்ரினோ, பெட்ரோலிய மண்டலம், மீத்தேன், ஷேல், ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசி, கெயில் என இத்தனைப் பேரழிவுத் திட்டங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக, தொண்டை வறண்டு சாகட்டும் என்பது போல் காவிரி நதி நீர் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் மறுப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கப்படவில்லை என்பதற்கு இதுதான் சரியான விடை.

இதனை உள்ளத்தில் நிறுத்தி போராடும்போது தள்ளாட்டம் ஏற்படாது. அதிருப்தியினால் விபரீத முடிவை எடுக்கத் தோன்றாது.

ஆனால் உணர்ச்சி வேகம் சிலரை ஆட்கொண்டுவிட்டது. தேனியைச் சேர்ந்த ரவி, ஈரோடு தர்மலிங்கம், கூடுவாஞ்சேரி கீரப்பாக்கம் ரமேஷ், விருதுநகர் சரவண சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் தீக்குளித்து தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டார்கள்.

நம் உள்ளங்களை நொறுக்கிவிட்டிருக்கும் இவர்களது செயல் அவர்களின் குடும்பத்தினருக்கே பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதுதான் வேதனை.

எனவே பிரச்சனைக்கு இது தீர்வல்ல என்பது தெளிவாகிறது.

இந்தத் தெளிவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டிருப்பது, காவிரி மேலாண்மை வாரியத்திற்காகத் தொடரும் இடையறாத போராட்டத்தின் மூலம் உறுதிப்படுகிறது.

எனவே தீக்குளிப்பு போன்ற தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் தகாத பாதையை கற்பனை செய்தும் பார்க்காமல் விட்டொழித்து, திடமான போராட்டப் பாதையில் அணிவகுக்குமாறு தமிழ்மக்களை அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

No comments