சம்பந்தன் விருந்தில்:மக்களோ வீதியில்…?


ஒருபுறம் உள்ளுராட்சி சபைகளிற்கான குத்துக்கரணங்களுடன் ஆட்சிக்கதிரையேறிய கூட்டமைப்பும் அதன் எடுபிடிகளும் அடுத்து கட்ட வருமான தொழிலை பார்க்க புறப்பட்டுவிட சாதாரண மக்களது வாழ்வோ வீதிகளிலும் அவலங்களிலும் தமிழ் புத்தாண்டு தினமான இன்றும் கடந்து போயுள்ளது.


தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறி வாக்குக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி பாற்சோறு உண்டு மகிழ்ந்துள்ளார்.
இன்னொரு புறம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நிலமீட்புக்காக போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் இன்று புத்தாண்டு தினமான இன்று 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். அதேபோல முல்லைதீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டமோ 436 நாட்களைத் தாண்டி வீதிகளில் தொடர்கின்றது.


அதேபோன்று கிளிநொச்சியில் ,வவுனியாவில்,மருதங்கேணியில் மற்றும் திருமலையென காணாமல் போனோரது போராட்டங்கள் தொடர்கின்றன.


அரசியல் கைதிகளது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர,மறுபுறம் தமது தந்தை புத்தாண்டிற்கு வருகை தருவாரென ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளோ மைத்திரியின் உறுதி மொழியினை நம்பி வீதியை பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாது கதிரையினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் தொடர்ந்தும் தெற்கில் நல்லெண்ணத்தினையே வரவழைத்துக்கொண்டிருக்கிறார். 


அவர்கள் இன்று சித்திரைப் புத்தாண்டை தெருக்களில் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்குபற்றியுள்ளார்.


இதன்போது பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் வில்வ மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி , கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார். சுபநேரத்தில் அங்கு விருந்துபசாரமும் நடைபெற்றது.

வழமைபோலவே இவ்வாறான விடயங்கள் பேசுபொருளாகின்ற போது பம்மிக்கொள்கின்ற கூட்டமைப்பின் அடிப்பொடிகள் இப்போதும் பம்மிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments