ரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது


நம்பிக்கையில்லா பிரேரணை விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான பேரத்தில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, சிறிலங்கா பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களால், காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளும் இவ்வாறாக அபகரிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும். சில தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடர்பான சிறிலங்கா பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எவ்வுக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments