Header Shelvazug

http://shelvazug.com/

சித்திரையில் எங்ஙனம் தமிழருக்கு புத்தாண்டு பிறந்திடும்? ஞா. ரேணுகாசன்

மார்கழி இருள் நீங்கி, தைமாத குளிர்ந்த காற்றில் உள்ள சுகம் எங்குமுண்டோ! ஐப்பசில போட்ட விதை காயாகி, கதிராகி புது நெல் வீடு முழுவதும் நிறையும் செல்வம் கொழிக்கும் மாதமல்லோ தமிழர் புத்தாண்டு மாதம். அது தைமாதம் எனும் குளிர்ந்த மனதிற்கு இதமான மாதமல்லோ! அதுதானே தமிழரின் புனித புத்தாண்டு, புதுமையான பல அற்புதங்கள் பிறந்திடும் ஆண்டு.

“ தை பிறந்தால் வழி பிறக்கும்” இது நம் முன்னோர் வாக்கு. சித்திரை பிறந்தால் எல்லாம் சிறக்குமென யாருமே கூறவில்லையே! எந்த சங்க இலக்கியங்களும் சரி எமக்கு முன்பிருந்த புலவர்கள் பகுத்தறிவாளர்களும் சித்திரை தமிழர் புத்தாண்டு எனக் கூறுவதாக வரலாறுகள் இல்லை.

மார்கழி மாத வறுமை, பட்டிணியை போக்கி வயிறாற உணவு உண்டு களிக்கும் மாதம் தைமாதம் ஆகும். இம்மாத்த்திலேயே , தானியங்களும், கிழங்கும் அறுவடையாகி புதுமை பல படைக்க, தாவரங்கள் பச்சையாடை உடுத்து, பூக்கள் மகரந்த அம்பை வீசி தேனீக்களை ஈர்த்து காதல் பாசை பேசும் மாதம், ஆநிரைகளும் பால்சுரக்கும், காளைகளும் தினவெடுத்து ஏறுதழுவுதலுக்கு தயாராகும். இச்சிறப்பு சித்திரையில் உண்டோ?

எத்தனை சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட மாதமல்லோ! தைதிருநாள், இந்த மாதத்தின் பிறப்பே தமிழரின் வருடப்பிறப்பு, இதை மறந்து பயணித்தல் தமிழரின் இருப்புக்கோ இறப்பு.

சங்ககால இலக்கியங்கள் தான் தமிழரின் வீரம், காதல் மற்றும் தமிழர் பண்பாட்டை தெளிவாக கூறுகின்றவை. இவற்றை ஆதாரமாக எடுத்து பார்த்து தெளிவுபெறுவதே சாலச்சிறந்தது.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை என
தைநீராடல் என சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதும், பொங்கலிடல், ஏறுதழுவுதல், ஆதவனுக்கு நன்றி செலுத்தல், பெரியோரை கனம் பண்ணுதல் மற்றும் உழவரின் மேன்மை போற்றல் இதை விட சிறப்பு “ புதிர் எடுத்தல்” மற்றும் தமிழ்கடவுளின் தைப்பூச நன்னாள் என எத்தகைய சிறப்பு கொண்ட தைமாதம் இதை விட வரட்சியின் அடிப்படையிலான சித்திரையை ஏன் நாம் புதுவருடமாக கொண்டாட வேண்டும். கொஞ்சம் சிந்திப்போம்.

இன்னும் சிறப்பாக உலகத்தோர் எல்லோரும் போற்றும் முப்பாலை கொண்ட திருக்குறளை அருளிய ஐயன் திருவள்ளுவர் பிறந்த மாதம் இது இதை விட சிறப்புக்கள் எம்மாதமதில் உண்டு, சித்திப்பீர்களா? தமிழன்பர்களே!

சித்திரையில் தானே தமிழர் புத்தாண்டு பிறக்கின்றது. அப்போது தானே புதிய பஞ்சாங்கங்கள் எழுதப்படுகின்றன. என நீங்கள் நினைப்பது என் மனநிலையில் பல வினாக்களை எழுப்புகின்றன.

சித்திரை வருடப்பிறப்பை எவ்வாறு அழைக்கின்றோம். “ தமிழ் சிங்கள புத்தாண்டு” என்று, தமிழரும் சிங்களவரும் பேசுமொழி, கலாச்சாரம் இன்னும் பல விடயங்களில் வேறுபட்டவர்கள் அப்படி இருக்க எங்ஙனம் இரு இனத்தவருக்கு பொதுவான வருடப்பிறப்பு உருவாகும்.

தமிழருக்கும் சிங்களவருக்கும் இத்தகைய ஒற்றுமையை வகுத்து தந்தவர்கள் யார்? சிங்களவர்கள் ஆரிய வம்சாவழியினர் என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டால், இதில் மறைக்கப்பட்ட தமிழரின் புனித நாளை கண்டு கொண்டாடலாம்.

சித்திரை மாதமதில் என்ன விசேடம் உள்ளது, தமிழர் அந்த மாதத்தில் புதுவருடம் கொண்டாட, வெயில் சுட்டெரிக்கும் மாதம், குளிர்ச்சியற்ற வரண்ட மாதம் இதை கொண்டாட என்ன காரண காரியம் சொல்கிறார்கள். பிராமணர்கள் கூறுவது மேச ராசி இம்மாதத்தில் எழுச்சிபெறுதாக ஒரு பித்தலாட்டம் ஒன்றே தவிர வேறு எதுவுமில்லை .

சித்திரையில் கத்தரி வெயிலில் குழந்தை பிறப்பதே மிகவும் கொடுமை என்கின்றனர். இன்னும் நமது முன்னோர் சித்திரையில் புத்திரன் பிறந்தால்... ஏதோ கெட்ட காலமென காலம் காலமாக நம்பி வாழ்கின்றனர். அப்படி கெட்ட காலத்தை எம் தமிழினம் கொண்டாட ஒருபோதும் வாய்ப்பில்லை. ஏனெனில் எமக்கான பண்பாடு, ஒழுக்கம் இன்னும் பல அரிய செயல்களை தந்தவர்கள் எம் முன்னோர்கள். அவர்கள் ஒருபோதும் இவ்வாறான செயலை செய்ய வாய்ப்பில்லை. இது ஒரு இடைச் செருகல்.

புரட்சி பாவலர் ஐயா பாரதி தாசன் அவர்களின் கவிதையில் தமிழர் புத்தாண்டு எது என்பதை விளக்குகிறார்.

“ தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவோம். சிந்தித்து செயலாற்றுவோம்.

சித்திரையில் தமிழர் புத்தாண்டை கொண்டாடுங்கள், ஆனால் அதை எமக்குள் திணித்து எம்மை அதன்பால் அதித நம்பிக்கையை ஏற்படுத்திய ஆரிய பிராமண வர்க்கத்தின் புத்திக்கூர்மையும் சேர்த்தே கொண்டாடுங்கள்.

இராமாயணத்தில் எமது தமிழ் அரசன் இராவணன் எமக்கு அரக்கனாக பாடம் புகட்டவில்லையா? இராமனை நாம் கடவுளாக ஏற்கவில்லையா? தமிழினத்தை கேலி செய்த தமிழால் உயர்ந்த பிராமண கம்பருக்கு நாம் தமிழ்க்கழகங்கள் அமைத்து தமிழை வழக்கவில்லையா? தமிழை உலகறிய செய்த ஐயன் திருவள்ளுவருக்கு எங்காவது கழகம் அமைத்து விழா எடுத்தோமா?  இவை போலவே இந்த சித்திரை புத்தாண்டு எனும் மாயவலை இன்னும் விலகாமல் தமிழரை அப்படியே பீடித்துள்ளது. இந்த அடிமை நிலை உடையும் தமிழால் புரட்சி செய்வோம்.

No comments