இந்தோனேசியா: 9 நாட்கள் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்

இந்தோனேசிய மீனவர்களால் மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்
மியான்மரிலிருந்து வெளியேறிய 76 ரோஹிங்கியா அகதிகள் 9 நாட்கள் கடலில் தத்தளித்த வந்த நிலையில், இந்தோனேசிய கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர். 

8 குழந்தைகள், 25 பெண்கள், 43 ஆண்கள் உள்ளிட்ட 76 அகதிகளும் இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் அமைந்திருக்கும் ஏசெஹ் பகுதிகு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இந்த அகதிகளில் ஒருவரான பாரிக் முகமது, மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் இருந்து தப்பிவர 10,000 ரூபாய் (150 அமெரிக்க டாலர்கள்) கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 


இதே போன்று கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி Langkawi என்ற மலேசிய தீவுப்பகுதியில் கைப்பற்றப்பட்ட படகில் 19 ஆண்கள், 17 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என மொத்தம் 56 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர். 

இது தொடர்பாக முன்னர் கருத்து  தெரிவித்திருந்த இந்தோனேசிய குடிவரவுத்துறை அதிகாரி அகுங் சம்பூர்னோ, “இவ்வாறான படகு பயணங்கள் தொடர்ந்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னிருந்த நெருக்கடிக்யை மீண்டும் உருவாக்கக்கூடும்மியான்மரில் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகின்றது. அத்துடன் ஆசியாவின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் மத்தியில் இந்தோனேசியா உள்ளதால் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களுக்கு வசதியான கடல் வழியாக எங்கள் நீர்வழிபாதைகள் உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தார். 

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதால், மலேசியாவை அடையும் முயற்சியில் பல ரோஹிங்கியா அகதிகள் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுகின்றது. மலேசியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், ‘ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி’ வாக்குகளின் அங்கமாகவும் இருக்கும் என எண்ணப்படுகின்றது. 

No comments