அல்பேனியாவில் 7வது நாளாகத் தொடரும் போராட்டம்: பிரதமரைப் பதவி விலகக் கோரி இளைஞர்கள் தீவிரம்


அல்பேனியாவில் பிரதமர் எடி ராமா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஏழாவது நாளாகத் தொடரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. போராட்டக்காரர்களுக்கும் கலவரத் தடுப்புப் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் பலர் காயமடைந்துள்ளதுடன், தலைநகர் டிரானாவில் உள்ள பொலிஸ் நிலையம் மற்றும் அரசாங்கக் கட்டிடங்களும் தாக்கப்பட்டுள்ளன.

போராட்டங்களில் உயர்நிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழகங்களில் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குதல், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் பிரதமர் எடி ராமா பதவி விலகுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திங்கள்கிழமைக்கு முன்னர் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, போராட்டங்களுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களில் 295 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 186 பேர் பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தீய சக்திகளால் இளைஞர்கள் தீவிரமயமாக்கப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு அல்பேனியா இலக்காகியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், பொலிஸாரின் நடவடிக்கைகள் குழப்பமானவையாகவும் பொறுப்பற்றவையாகவும் இருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர் ஜென்டியன் செஜ்ரானி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு சட்ட உதவி வழங்கி வரும் அவர், கைது நடவடிக்கைகளின்போது போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறம், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் அடக்குமுறை நடவடிக்கைகளே வன்முறையைத் தூண்டுவதாகப் போராட்டத்தில் ஈடுபடும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், ஜனநாயகத் தேர்தல்கள் குறித்த சந்தேகங்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை ஆகியவை மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அல்பேனியாவில் சுமார் 13 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் எடி ராமா, 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதைத் தனது முக்கிய இலக்காக அறிவித்துள்ளார். எனினும், தற்போதைய போராட்டங்கள் அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

No comments